Tuesday, December 25, 2012

எஸ்.பி.பி மேல் சத்தியம்

எஸ்.பி.பி மேல் சத்தியம்


வடக்கிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
எஸ்.பி.பி இந்தியில்
பாடிக்கொண்டிருந்தார்
கர்னாடகாவில் கன்னடத்தில்
ஆந்திராவில் தெலுங்கில்
கேரளாவில் மலையாளத்தில்
உலகம் முழுக்க காற்றலைகளில்
விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்
எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.
சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்
பல பெயர்களின் கும்பலில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்
ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது
தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்
எனினும் பொறித்தது
எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல
இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்
பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?
நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?

Monday, December 17, 2012

மீண்டும் வாழ்தல்


மீண்டும் வாழ்தல்

அடையாள அட்டை எண் 396
பணி ஓய்வு பெறும்போது
அடையாள அட்டை எண் 3342
பதினெட்டு பணிஆண்டுகள்  நிறைவுற்றிருந்தார்

இவர்களிருவருக்கும் முன்னும் பின்னும்
பல அடையாள அட்டைகள்
எனினும்
396க்கும் 3342க்கும் பல ஒற்றுமைகள்

396 வாழ்ந்த வாழ்க்கையையே
3342 மீண்டும் வாழ்வதும்
பெரிய வேறுபாடு
காலம் மட்டுமே என்பதையும்
3342 கண்டுணர்ந்தபோது
சலிப்பினால் இமைப்பொழுதில் இளைத்தார்

எஞ்சிய வாழ்நாட்களிலாவது
தனக்கெனவொரு தனித்த வாழ்வை
வாழ்ந்துவிடுவது என்று சூளுரைத்தார்
‘அந்த வாழ்க்கையும் யாராலாவது
வாழப்பட்டிருக்கலாமே’ என்று ஒலித்த அசரீரி 
வந்த திக்கில்
வெறுப்புடன் வெறுங்கையை வீசியதில்.
ஒரு மஞ்சள் மலரில் அமர்ந்திருந்த
சாகாவரம் பெற்ற வண்ணத்துப்பூச்சி
கலைந்து எழுந்து
அதே செடியின் இன்னொரு
மஞ்சள் மலரில் அமர்ந்து
உறிஞ்சத்தொடங்கியது

பரம்பரை



பரம்பரை

கறுப்பாயிருக்கிறவங்களை என்னால அந்தளவுக்கு நேசிக்க முடியறதில்ல.சகஜமாத் தொட்டுப் பேசறதுகூட இல்லைன்னா பாத்துக்கங்களேன். அதனாலதான் என் பையன் மேல எனக்கு அந்தளவு ஈடுபாடு இல்லையோன்னு யோசிச்சதுண்டு. அது உண்மைதான்னும் மனசுக்கு தெரியுது.ஆனா, என்னால  ஏனோ மாத்திக்க முடியல.எம் பையங்கிட்ட ஒட்டுதல் இல்லாம, எப்பவும் ஒரு வெறுப்போடயே இருக்கிறன்.

எங்கம்மாவும் இப்படித்தான்.அவளப் பாத்து, பாத்து, அவ பேசறதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளந்ததாலயே எனக்கும் இந்தக் கொணம் வந்திருக்கலாம். அவ பொதுவா எந்தக் கொழந்தைங்களையுமே கொஞ்சி நான் பார்த்ததேயில்லை.’’ டேய்..டேய் கம்மனாட்டி..இங்கப் பார்றா. அங்க என்னாடாப் பாக்கற..ங்கொப்பனை என்னாடா பாக்கற. ங்கொப்பனை நீ பாத்ததேயில்லயா? இங்கப் பார்றா..டேய்..இங்கப் பார்றான்னா..’’ இப்படித்தான் கொஞ்சுவா.ஒரு கொழந்தையைப் பார்த்தா, நாமும் ஒரு கொழந்தையா மாறி, எறங்கி வரணும்.அவளாவது, எறங்கறதாவது! ஆனா, பாக்க சிவப்பா அழகா இருக்கிற கொழந்தைங்கள மட்டும் தொட்டுப் பேசுவா.ஆனா, கொடுமை என்னான்னா அவளுக்குப் பொறந்த நாங்க எல்லாருமே கறுப்புத்தான்.எங்கப்பன் கறுப்பு அப்படியே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சி. எப்படி அந்தாளை எங்கம்மா கட்டிக்கிட்டாங்கிறது இன்னும் புரியாத புதிர்தான். அவளுக்கும் இந்த ஒலகத்தில எந்தவொரு மனுசாளு மேலயாவது உண்மையிலெயே அன்பு,பாசம்லாம் இருக்குதான்னு கேட்டீங்கன்னா, அதுக்கு ஒரே ஒரு ஆள்தான் உண்டு. அது அவங்க அப்பன், குப்புசாமி கவுண்டர் மட்டுந்தான். அந்த ஆள் ஓரளவு   நல்ல செவப்பாவே இருப்பாரு.அந்தப் பட்டிக்காட்டு ஊருக்கு, அந்த ஜாதிக்கி அது பெரிய கலரு, பெரிய விஷயம். அவரோட கலருதான் நமக்கும் வந்திருக்குங்கிற பாசமோ என்னவோ?. ஆனா, அதுவும் சரிதான். அவரு காலத்துல ஊருலயே பெரிய மனுஷன் வேற. எங்க தாத்தா பாக்க ஜெயஜாண்டிக்கா இருப்பாரு. இந்திரா காந்தி மூக்கு. சோமயாஜுலுன்னு ஒரு நடிகர் இருந்தாரே அவர ஞாபகப்படுத்தற மாதிரியான மொகம். ஆனா ரங்காராவு மாதிரி கம்பீரமான உருவம், அதே மாதிரி கணீர் குரல்.அவர் வச்சிருந்த வால்வு செட் ரேடியோல ந்யூஸ் கேட்க திண்ணையில பெருசுங்கல்லாம் ஒக்காந்துருக்கும். இவருக்கு மட்டும் ஒரு சேரை காத்தோட்டமா போட்டுக்கிட்டு, கால் மேல கால் போட்டுக்கிட்டு வாசலுக்கு வெளிய தன் ஒடம்பத் தானே தடவிக்குடுத்துக்கினே ஒக்காந்திருப்பாரு. வயல் வேலை முடிச்சிட்டு போறவங்க கூட நின்னு செய்தியில என்னா சொல்றான்னு கேட்டுட்டுப் போவாங்க. டவுன்லருந்து துக்ளக் புக்லாம் வாங்கிப் படிக்கிற அளவு ஊர்லயே வெவரமான ஆளு. நான் லீவுல ஊருக்குப் போயிருக்கறப்ப துக்ளக் புக்கைக் குடுத்துப் படிக்கச் சொல்லுவார் எங்க தாத்தா. ‘ டேய் டவுன் கேடி. கேடிக்குப் பொறந்த கேடி நீ மட்டும் எப்படியிருப்ப?அப்பனாட்டந்தான இருப்ப. இந்தா , இதைப் படின்னு சொல்வார். தாத்தாவுக்கு எங்கப்பாவ புடிக்காது. எங்க அம்மா ஏன் இப்படி இருக்கிறான்னா, அதுக்கு எங்கத் தாத்தன்தான் எல்லா வகையிலயும் காரணம். அந்தாளும் எந்தப் பசங்களாயிருந்தாலும் இப்படித்தான் பேசுவார். ஆனா, இப்ப யோசிச்சுப் பாத்தா எங்க அம்மாவைவிட பல மடங்கு எங்கத் தாத்தன் எவ்வளவோ பரவாயில்லன்னுதான் சொல்வேன்.ஏன்னா, அந்தாளுக்கு பாசம்னா என்னான்னு வாசனைக்காவது தெரியும். எனக்கு எங்க அப்பாவைத் திட்டுறாரேன்னு கோவமா வரும். படிக்க மாட்டேன். அப்புறம் அங்கிருக்கிற பெருசுங்க யாராவது சொன்னப்பறந்தான் படிப்பேன்.  நாலாவது,அஞ்சாவது படிக்கிற பையன் இப்படி சரசரன்னு படிக்கிறானேன்னு எல்லாரும் ஆச்சரியமாப் பேசிக்குவாங்க.அந்த ஊர்ப் பசங்கள என்னைக் காட்டித் திட்டுவாங்க.  நான் லீவுல போயிருக்கிற சில சமயங்கள்ல அங்க இன்னும் லீவ் விட்டிருக்கமாட்டாங்க. ஒரு சின்ன ஓட்டுவீடு மாதிரி இருக்கிற பள்ளிக்கூடம் எங்க தாத்தா வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்தது.அந்த பள்ளிக்கூடத்தை ஆச்சரியமா பாப்பேன். இந்த மாதிரி ஸ்கூல்ல படிக்காமபோயிட்டோம்மேன்னு ஏக்கம் வரும். ஏன்னா, பசங்களுக்கு ஒரு கட்டுப்பாடுஏ இல்லாம இருந்தது.அவங்கவங்க எழுந்து இஷ்டத்துக்கு ஓடறதும், சத்தம் போட்டு விளையாடுறதுக்கும், எதிரிக்கிலிருக்கிற எங்க மாமாவோட மளிகைக் கடைக்கு வர்றதும் பாக்க நம்பவே முடியல.எங்க தாத்தா  டெல்லிக்கி அப்பப்ப எதாவது மாநாட்டுக்குல்லாம் போய்வர்ற ஆளு.தோளில எப்பவும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.வீட்டுல ஒரு தலைவர் போட்டோ இருக்கும்.அவரும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.  ஊருக்குள்ள பெரிய அதிகாரமும், அந்தக் காலத்துலயே எழுதப் படிக்கவும் தெரிஞ்ச ஆள்.

எங்க மாமா ஒருமுறை சொன்னார்.அதாவது சின்னத் தாத்தாவோட மகன்.
’’ உங்க தாத்தா அந்தக் காலத்துலயே படிச்சவன்ங்கிறதாலதான் எங்கப்பன் சொத்துல நிறைய ஏமாத்தி எழுதி வாங்கிக்கிட்டான்.’’ அப்படிச் சம்பாதிச்ச சொத்துல பொண்ணுக்கும் பங்கு குடுத்தவராச்சே. இதனால எல்லாந்தான் எங்கம்மாவுக்கு அவங்க அப்பன் மேல பாசம். அப்பனைத் தவிர அவ பொறந்த வீட்டு ஜனங்க இன்னும் சிலர் மேல பாசம் உண்டுன்னு நான் ஒரு சின்ன லிஸ்ட் மனசுல வச்சிட்டிருந்தேன்.ஆனா, அவ அந்த லிஸ்டுல இருந்த எல்லாரையும் ஒன்னொன்னா காலி பண்ணிட்டா.

நான் சின்னப்பையனா இருக்கிறப்ப அவ அடிக்கடி ஒரு சம்பவத்தைத் தெருப்பொம்பளைங்கக் கிட்ட பெருமையா சொல்லிக்கினுருப்பா.  அது அவளோட சின்ன வயசில நடந்ததாம். அவங்க  ஊர்ல  இருக்கிற ஒரு குடிகாரன், பேரு என்னமோ சொல்வா.  இவ சின்ன வயாசாயிருக்கும்போது, அவளோட பின்னாலயே  நைஸா வந்து டபக்குன்னு பாவாடையத் தூக்கிட்டு, உள்ளப் பூந்துக்குனு ‘’ கவுன்ச்சி..ஒம்பொண்ணு என்னா செவப்பு! ன்னுவானாம். சொல்லிட்டுச் சொல்லிட்டு சிரிப்பா. எனக்குப் பத்திக்கினு வரும்.மொதல்லயெல்லாம் அந்த ஆளுமேலதான் கோவம் வந்துக்கிட்டிருந்தது.ஆனா, போவப்போவ இவ மேலதான் எரிச்சல் வந்துச்சி.சனியன் புடிச்சவ.விவஸ்தைன்னா என்னன்னே தெரியாதவ. மூஞ்சியிலயே போய் காறி துப்பலாமான்னு இருக்கும்.

எங்கம்மாவ எனக்கு சுத்தமாப் புடிக்காதுன்னாலும், அவக்கிட்டருந்து இந்தக் கறுப்பு, செவப்பு கொணம் மட்டும் மனசோடக் கலந்துபோய் இருக்குதேன்னு நினைச்குவேன்.ஆனாலும், அது கறை மாதிரி ஒட்டிக்கினு போவ மாட்டேங்குது ங்கிறதுதான் உண்மை..அதேமாதிரி கறுப்புலயே கூட பணக்காரங்க கறுப்பு சரி பரவாயில்லைங்கிற மாதிரி இருக்கும்.ஏன்னா, ஷைனிங். அண்டங்காக்காவைவிட சாதா காக்கா கலரு பரவாயில்லதானேங்கிற கதைதான். வெள்ளைக்காரனுக்கு கறுப்பருங்க மேல இருக்கிற வெறுப்பு எனக்கு ஓரளவு நியாயமாத்தான் தெரியுது. ஒருமுறை எங்க காலேஜ்ல செஞ்சிக் கோட்டைக்கு டூர் போயிருந்தப்ப நடந்த  ஒரு சம்பவத்தை அடிக்கடி  நெனைச்சிப்பேன்.எங்க செட்டுல இருந்த முருகன் செம கருப்பா இருப்பான்.அவன், அங்க சுத்திக்கிட்டிருந்த வெள்ளைக்கார சின்னப் பொண்ணுக்கிட்ட, பறக்கிற மாதிரி கையை விரிச்சிக்கிட்டு, ஆஆஊஊன்னு கத்திக்கிட்டே கிட்ட ஓடினான். அது பாவம் பயந்து, பதறிப்போயிடுச்சி. முருகங்கிட்ட வெள்ளைக்காரனும், வெள்ளைக்காரிச்சியும் கன்னாமுன்னான்னு கத்தினாங்க.  

நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறப்பகூட செவப்பான பொண்ணா இருக்கணும்கிறதுதான் நான் போட்ட முக்கியமான கண்டிஷன். கறுப்பா இருக்கிற பொண்ணுங்க, அவங்க என்னாதான் அழகா, அமைப்பாவே இருந்தாலுமே எனக்கு ஒரு இது வர்றதில்ல.செவப்பா பொண்ணு கட்டுனா பொறக்குறது செவப்பாப் பொறக்க வாய்ப்பும் இருக்குதே.ஆனா, அதையும் மீறி பொறக்குறது என்னாட்டம் கறுப்பா பொறந்துட்டா? அதுக்கென்னா பண்ணமுடியும்? எல்லாம் ஒரு முயற்சிதான்.பாப்பமே.அதனாலதான் செவப்பா பொண்ணுதேடி கட்டுனேன்.

நான் பயந்தமாதிரியே எம் பையன் கறுப்பா, என்னைவிடவே கறுப்பாப் பொறந்துட்டான்.அப்பவே ஒரு ஏமாத்தமும், வெறுப்பும் ஸ்டார்ட் ஆகிடுச்சின்னுதான்   நெனைக்கிறன்.அதுதான் நா எம் பையங்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்குக் காரணமாயிருக்க முடியும்.ஆனா,அது மட்டுமேன்னு சொல்லிடவும் முடியாது. ஒரு கொழந்தைன்னா எப்படியெப்படியெல்லாம் இருக்குமோ, இருக்கணுமோ அப்படியெல்லாம் அவன் இல்லை. இதுவும் ஒரு முக்கியமான காரணம்.ஓடியாடி விளையாட மாட்டான்.துருதுருன்னிருக்க மாட்டான்.யார் எது கேட்டாலும் பேச மாட்டான்.அதுவேணும் இது வேணும்னு அடம் புடிக்கமாட்டான். வீட்டூக்கு வரவங்கள்லாம் பேசிப் பேசிப் பார்த்துட்டு நல்ல பையன், அமைதியான பையன்னுதான் சொல்லுவாங்க. முடி வேற வெட்டாம, சாமிக்கு நேந்துவுட்ட கணக்குக்குத்  தள்ளிக்கினே போய் நெறைய வளந்து குடுமியெல்லாம் போட்டு வச்சிருப்பா எம் பொண்டாட்டி. அதுவேற அசிங்கமா இருக்கும். எங்கம்மா பேரனைப் பாத்த கதையை சொல்லாம விட்டுட்டனே.

எம் பொண்டாட்டி கொழந்தை பொறந்ததும் அவங்கம்மா வீட்டுக்குப் போய் இருந்தா.  நாங்க இருக்கிறது தனிக்குடித்தனம், மெட்ராசுல. மெட்ராசுலயே பிரசவமும் பாத்துட்டோம். ரொம்ப நாள் கழிச்சி,  எங்கம்மா வெறுங்கையோட எம் மாமனார் வீட்டுக்குப்போய், கொழந்தையைப் பாத்திருக்கா.ஊர் ஒலகத்துல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஏன் இன்னும் பேரப்பையனைக்கூட போய் பாக்கலியான்னு. அதான். பாத்துட்டு, ‘இதென்னாஆ? இந்தப் பையன் இப்படியிருக்குது?கன்னங்கரேல்னு பரதேசியாட்டம்.. வயித்துலயிருக்கும்போதே குங்குமப்பூவுல்லாம் வாங்கிக் குடுத்திருக்கணும்.அவன் அப்பனைவிட கறுப்பாயிருக்குது.காசி செலவாயிடுமேன்னு பாத்தா இப்படித்தான் பொறக்கும் அது இதுன்னு கன்னாபின்னான்னு பேசிட்டுப் போயிருக்கிறா.
சொந்தப் புள்ளையான என் கல்யாணத்துக்கே வரமாட்டேன்னு கிராக்கிப் பண்ணவ.வர்றதுக்கு அதுவேணும், இதுவேணும்னு இதான் சமயம்னு எங்கிட்ட காசு புடுங்கினவ.எங் கல்யாணம் அவ ராஜாங்கம் நடத்துறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்குமே.ஆனா, அதை நான் அவளுக்கு நான் குடுக்கல. பெரியப்பா, பெரியம்மாவ முன்ன வச்சி கல்யாணம் பண்ணேன்.அவ ஆசைப்படி விட்டிருந்தன்னா எங் கல்யாணம் கந்தக் கோலமாகியிருக்கும்.அப்பேர்ப்பட்டவ மருமவள கிட்டயிருந்து ஏதாவது பாத்துப்பாளா என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள்லயே அவளை பாக்கிற வாய்ப்புகூட எம் பொண்டாட்டிக்கிக் கிடைக்கல.   நான் வீட்டுக்குப் போனதும் எங்கம்மா வந்துட்டுப் போன கதைய எங்கிட்ட சொன்னாங்க. தொட்டுக்கூட பாக்கலன்னு ஆச்சரியமா சொன்னாங்க எனக்கு ஆச்சரியமெல்லாம் ஒன்னுமில்ல.நேரா வண்டியயெடுத்துனு வீட்டுக்குப் போனன்.ரொம்ப நாளு கழிச்சி ,வருஷங்களே ஆகிப்போயிருக்கும், நானே அப்பதான் எங்க வீட்டுக்குப் போனேன். அதுக்கப்புறம் இதோ இன்னவரைக்கும் மறுபடியும் போவவும் இல்ல. அன்னிக்குப் போய் மண்டைய ஒடச்சிட்டன்.மனைக் கட்டையால அடிச்சி மண்டையில ரத்தம் வந்துடுச்சி. நான்  பாட்டுக்கு திரும்பிக்கூட பாக்காம வந்துனே இருந்துட்டன். அடிபட்டவ நிலைமையை நினைச்சி லேசா ஒரு பரிதாபம், பதட்டம் பயம் எனக்காவது வந்துச்சி.ஆனா, அவ என்னா தெரியுமா பண்ணாளாம். தெரு ஆளுங்க எத்தனையோ பேர் என்னா சொல்லியும் கேக்காம ஹாஸ்பிட்டலுக்குப் போவாத. நேரா போலீஸ்டேசனுக்குப் போன்னாளாம்.ஏற்கனவே ஒருவாட்டி, எம் பேர்ல போலீஸ்ல கம்ப்லெயிண்ட் குடுக்கபோனவதான் அவ. கேஸ் குடுத்தா என் வேலைக்கே வில்லங்கமாயிடும்னு தெரிஞ்ச நாட்டு வக்கீல்தான் அவ.அப்பேர்பட்டவதான் என்னைப் பெத்த மவராசி.  எங்கூடப் பொறந்தவங்க எல்லாருமே  எங்கம்மாவ அடிச்சிருக்காங்க.அடிக்கும்போது திருப்பி அடிப்பாங்க.ஆனா, நான் மட்டுந்தான் அடிச்சதேயில்ல. அடிச்சா கையப் புடிச்சுக்குவேன், இல்ல வெளியில ஓடிடுவேன்.எப்பவாவது பாத்திரங்களைத் தூக்கிப்போட்டு ஒடைச்சிடுவேன். இன்னுங்கூட வீட்டுல நினைவுச் சின்னங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆங்! எங்க வுட்டேன்? எம் பையனைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தம். ஒரு நாளு நான் சிக்னல் வீக்காயிருக்குதேன்னு தெருவுல நின்னுப் பேசிக்கினிருந்தன். அப்ப இளங்கோ அவம் பையனோட தெருவில  நடந்து போய்க்கிட்டிருந்தான். என்னைப் பார்த்துட்டு நின்னான். நான் வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போய் ஒக்கார வச்சிட்டு பேசிக்கிட்டிருந்தன். இளங்கோவோட பையன் யுவனும், எம் பையனும் ஒரே ஸ்கூல்ல ஃபஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறானுங்க. அந்தப் பையன் எம் பையனைப் பார்த்துட்டு நல்லா சிரிச்சிச் சிரிச்சிப் பேசறான். இவன் என்னாடான்னா என்னைத் திரும்பித் திரும்பிப் பாக்கறதும், முழிக்கிறதுமாவே இருக்கான்.இளங்கோவும் பேச்சுக் குடுத்துப் பாக்கறான். எம் பையன் வாயவே தொறக்க மாட்டங்கறான்.  நானும் பேசுடா பேசுடா. யுவன் உங்கூடத்தானடா படிக்கிறான்.அவன் எப்படி பேசறான். அவங்கேக்கிறதுக்காவது பதில் சொல்லுங்கிறன். ம்ஹூம். எனக்காக் கடுப்பாயிடுச்சு. அப்படியே மண்டையிலயே ஒன்னுப் போட்டன்.இளங்கோதான் தடுத்தான்.பேசி முடிஞ்சி வீட்டுக்குக் கிளம்பும்போது, வெளிய போய் தெருவாசல்ல நின்னு ‘ சின்னப் பையந்தான அவன். அடிக்காத. அவன் உன்னைப் பாத்தாலே பயப்படுறான். அவங்கிட்ட நீ ஃப்ரீயா பேசினாத்தான அவனுக்கு பயம் போகும். நீ அவங்கிட்ட பேசறதேயில்லன்னு எனக்கேத் தெரியும்.எங்கியாவது வண்டியில ஒக்கார வச்சி வெளியில கூட்டினு போ. இன்னும் ஒருவாட்டிகூட உன்னை அவங்கூட வெளியில போயி நான் பார்த்ததேயில்ல. இன்னிக்கி லீவுதான. இப்பவே கூட்டிக்கிட்டு போ.ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.  எனக்குந்தான் நல்லாவே தெரியுது.ஆனாலும், என்னால மாத்திக்க முடியலயே.எப்பவாவது  நானே ஆச்சரியப்படுற மாதிரி ஒழுங்காப் பேசுனாக் கூட அவம் பண்றதப் பாக்கும்போது கோவம் வந்துடுது. அப்புறம் திட்டுதான், அடிதான்.

என்னதான் நம்ம மனசுக்குள்ளயேயிருந்தாலும், அதை இன்னொருந்தங்க சொல்லக் கேட்கும்போதுதான் நல்லா ஒரைக்குது. பையனை வெளியில வண்டியில கூட்டிக்கிட்டுப் போறன்.அவனுக்கு நல்லதா ட்ரஸ் போட்டுவுடுன்னதும் எம் பொண்டாட்டியால நம்ப முடியாம பாக்கிறா. நேரா சில்ட்ரன்ஸ் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போனேன். சறுக்கா மரம், ஊஞ்சல் எல்லாம் காட்டினேன். ஊஞ்சல் ஆடச் சொன்னா மாட்டெங்கறான்.பயப்படுறான்.பொறுமையா ஒக்கார வச்சி, ‘வினோத் நல்ல பையன்.தைரியமான பையன். இனிமேல் எதுக்குமே பயப்பட மாட்டாந்தான.ன்னு சொல்லி ஊஞ்சல்  ஆட்டினன்.சிரிச்சான்.பயத்தில என்னை ஒரு கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டான். அப்புறமா இறக்கி விட்டு அப்படியே நடத்திக் கூட்டிக்கிட்டுப் போனன்
‘அப்பா. அதோ அது என்னாது?
அப்பா. எங்க ஸ்கூல்லகூட ரோஸ்லாம் இருக்குது
அப்பா. யுவன் கூட எங்கக் கிளாஸ்தாம்பா
அப்பா. இனிமே நான் பயப்பட மாட்டேன் இல்லப்பா
அப்பா அப்பா அப்பான்னு நிறுத்தாம எதையாவது பேசிக்கிட்டேயிருந்தான். எவ்ளோ நாளா தேக்கி வச்சிக்கிட்டிருந்த அணைய ஒடைச்சா மாதிரி பேசிக்கிட்டேருந்தான். ஆனா, தண்ணி எங் கண்ணுலதான் வந்துக்கிட்டேயிருந்துச்சி..அப்படியே அவனுக்கு மொகங்காட்டாம திரும்பி பேச்சுக் குடுத்துக்கிட்டே வந்தன். அவனும் பேச்சை நிறுத்தவேயில்ல. 



                     

Tuesday, November 20, 2012

தீர்ப்பு


எண்ணிலடங்காத் துளிகலாலான
ஒற்றை நதி
நடக்கிறது
எண்ணிலடங்களடங்காக் கால்களால்
படைவீரர்களின் அணிவகுப்பாய்
தடைகளை உடைக்கிறது
வறட்சியை நனைத்து பசுமையாக்குகிறது
பாதைகளை உருவாக்குகிறது
எல்லைகளை அழிக்கிறது
தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின்  நாக்குவேர்களுக்கும்
ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று
நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்
தாகச்சூடு தணிக்கிறது

வீழும் அருவியில்
வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?
மீனினங்களாவது நீந்த முடியுமா?

ஒற்றைக்காலும் வானம் பார்க்க
தலைக்குப்புற விழுகிற அருவி
நீரின் வீழ்ச்சிதான்.

Thursday, November 8, 2012

இறுதி மூச்சில் தாலிப்பனை

இந்த வலைப்பூவில் எப்போதுமே அதிகளவில்  பார்க்கப்படும் பதிவாக இருப்பது தாலிப்பனை படங்கள் கொண்ட இந்தப் பதிவுகள்

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

http://thooralkavithai.blogspot.in/2009/12/blog-post_29.html

மேற்கண்ட பதிவுகளில் இடம்பெற்ற தாலிப்பனை தன் ஆயுளின் இறுதிக்காலத்தில் பூப்   பூத்து நிற்கிறது. அதன் தற்போதைய படங்கள்

 நன்றிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சுட்டி http://www.jeyamohan.in/?p=6063


Wednesday, September 12, 2012

வாடாத மலரன்னன்,கவிஞன்



அண்மையில் கவனத்தை இழுத்த, ரசித்த கவிதை...
(தேவதேவன்)


வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது,
அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!
என்றாள் அவர் மகள்.

நெஞ்சுக்கூடு லேசாகிவிட்டதை உணரமுடிகிறது. இனி, கவிதை குறித்த என் சிறு பகிர்வு. இக் கவிதையில் கவிஞனும், தற்செயல் நேர்ச்சியும் ஒன்றுகலந்து ஒரு அருமையான கவிதை கிடைத்துவிட்டது. நவீன கவீதைகளுக்கு உள்ள சிறப்பிடமே இந்தக் காத்திருத்தல்தான்.ஒரு சூழலுக்கோ, தலைப்புக்கோ தானாகவே முயன்று எழுதுகிற கவிதைகள் ஒருவகைஇவை திட்டமிட்டு எழுதப்படுவன. அவ்வகைக் கவிதைகளை நீட்டித்துக்கொண்டே போகமுடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வகைக் கவிதைகளில் வெளிப்படும் திறமை வேறுவகையானது.ஆனால், கவிதையுணர்வால் எப்போதும் விழிப்புணர்வோடு காத்திருக்கும் கவிஞனுக்கு காண்கின்ற எத்தனையோ காட்சிகள் கவிதைகளாகும்.கண்ணால் கண்ட காட்சிகள், நிகழ்வுகள் போனறவற்றால் தூண்டப்பட்டு கூடவே கற்பனையையும் கலந்து எழுதப்படுகின்றன, நவீனக் கவிதைகள். மேற்சொன்ன கவிதை திட்டமிட்டு எழுதியதல்ல என்பது திடமாகிறது.இந்தக் கவிதை தேவதேவன் மூலமாக நிகழ்ந்தேறியிருக்கிறது, அவ்வளவுதான்.

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது...

கூடுதலாய்ச் சில கணங்கள் என்கிற வரி, கூடுதல் கவனத்திற்குரியது. இப்படி நிற்கிறவன்தான் கவிஞன். கவிஞனல்லாதவர்களும் ரசனையால் இப்படி நிற்கமுடியும். ஒருவகையில் இவர்கள் கவிஞனைவிட நற்பேறு பெற்றவர்கள் எனலாம். தன் மனவெழுச்சிகளை சொற்களில் பரிமாற்றும் இன்னல்  இவர்களுக்கில்லை, என்கிற வகையில்.
இதோ, இப்போது இந்தக் கவிதையை ருசித்ததோடு நின்றுவிடாமல் ,முன்வைத்து நான் எழுதிக்கொண்டிருப்பது போல்தான்.

கவிஞன் மலரின் முன் நின்றுகொண்டிருக்கும்போது மனதில் கவிதை வரிகள் பின்வருமாறு பிறக்கிறது...

வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

எப்போதும் என்கிற இடம் சிறப்பானது. இம் மூன்று வரிகளை கவிதையில் முதலில் வைத்ததும் சிறப்பு. இவ் வரிகள் மட்டுமேகூட தனித்த கவிதையாய் நிற்கும் வல்லமையோடிருக்கிறது.இப்படி ஓயாமல் மனதிற்குள் எழுதியெழுதி அழித்துக்கொண்டேயிருப்பதுதான் கவிஞனின் வேலை, மற்றும் காத்திருத்தல். அவற்றுள் தேர்ச்சி பெறுகிற வரிகளே மற்றவர்களுக்குப்  பகிர்ந்துகொள்ளும்படி கிடைக்கிறது.
கவிஞனும் வாடாத மலர்தான். கவிதைகளுக்காக காதலோடு காத்திருப்பவன்தான்.

அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!
என்றாள் அவர் மகள்.

மகளின் தற்செயலான பேச்சு எத்தனைப் பொருத்தம் கொண்டு அமைந்துவிட்டது ! கவிதையை எங்கெங்கோ கூட்டிச் சென்றுவிடுகின்றன மேற்காணும் வரிகள்.ஒருவேளை தற்செயல் நிகழ்வாய் அல்லாமல் கவிஞரின் கற்பனையாகவும் இருக்கக்கூடும்.எனினும் வாய்ப்பு மிகக் குறைவென்றே எண்ணுகிறேன்.

நெகிழ்ச்சியாலும், பரவசத்தாலும் மேலெழுகிற கவிதை.

அழகுக் குறிப்புதான் இந்தக் கவிதை!

Tuesday, May 22, 2012

விலக்கப்பட்ட கனி


விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள்  நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
ல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை  
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்
விடம்
.

Friday, May 18, 2012

சூத்திரர்களின் கதை


சூத்திரர்களின் கதை


                             ஒரு நூல் நாவலாகவும், தன் வரலாறாகவும், இனவரைவியல் கூறுகளோடும், அரசியல் பின்னணியோடும், தகவல்களோடும், ஆய்வறிக்கைகளாகவும், கலை நேர்த்தியான எழுத்தோடும்தன் முன்னேற்ற நூலாகவும்  என்று பன்முகத்திறன் கொண்டு விளங்கமுடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக ‘ஒரு சூத்திரனின் கதை நூலைச் சொல்லலாம். ஏ.என்.சட்டநாதன் எழுதிய தன் வரலாறே இந்த நூல்.முழுமையடையாத தன் வரலாறு.   நூலாசிரியர் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடும் சமயத்தில்  நூல் நின்றுவிடுகிறது.ஆனாலும், அதற்குப் பிறகான சட்டநாதன் என்பவரைத்தான் பலரும் அறிந்திருக்கக்கூடும். இட ஒதுக்கீடு  வழங்கும் சமூக நீதி ஏற்பாட்டில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய தமிழ் நாட்டில், அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் என்ற வகையில் அறிந்திருக்கமுடியும்.

  

                                இந்த நூலை அவர் தன் விருப்பப் பணிவோய்வுக்குப் பிறகே எழுதத் துவங்கிருக்கிறார். ஆனாலும், தன் சிறுவயது காலத்தையும் ஈரம்காயாமல் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற கோடுபோட்ட ஒரு நோட்டில் சட்டநாதன் எழுதிவைத்ததை அவருடைய பேத்தியும், இலண்டன் பல்கலைக்கழக கோல்ட்ஸ்மித் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றும் உத்தரா நடராஜன்  நூலாகப் பதிப்பித்திருக்கிறார். பெர்மணண்ட் பிளாக் என்னும் வெளியீடு மூலம் முதலில் ஆங்கிலத்திலேயே இந்நூல் PLAIN SPEAKING:  A SUDRA’S STORY’ என்று வெளிவந்திருக்கிறது. ஆங்கிலப் பதிப்பைவிட, தமிழில் விலை குறைவாகவே காலச்சுவடு அளிக்கிறது.இதை தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர்கள் கே.முரளிதரன் மற்றும் ஆ.திருநீலகண்டன் ஆகியோர். மேலும்,  இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சட்டநாதனின் உரைகளை தமிழில் மொழிபெயத்தவர்கள் வ.ஜெயதேவன், சிவ.மாதவன் ஆகியோர். இந்நூல் தமிழில் வர உறுதுணையாக இருந்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று அறிய முடிகிறது.


                    பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, பணிகள் என்பன போன்ற விவரங்களை முன்னுரையிலேயே படித்துவிட முடிகிறது. இதைத் தாண்டி ஒரு தன் வரலாற்று நூலுக்குள் என்ன இருந்துவிடப்போகிறது  என்கிற சலிப்போடு படிக்கத்துவங்கியபோது, ஆச்சரியமாக , நூல் அப்படியே வசியப்படுத்திக்கொள்கிறது. உத்தரா நடராஜன் எழுதியுள்ள முன்னுரை குறிப்பிடத்தகுந்தது.
சட்ட நாதனின் பூட்டி(பாட்டியின் தாய்) முதல், இந்த நூலை பதித்தவரான சட்ட நாதனின் பேத்தி உத்தரா நடராஜன் வரை என்று எடுத்துக்கொண்டால் ஆறு தலைமுறைகளை உள்ளடக்கி, ஒரு நாவலின் பின்புலத்தோடும், வெளிப்பாட்டு அழகோடும் அமைந்திருக்கிறது.

                      பள்ளி என்று இருந்த சாதியை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டங்களில், பலருடைய தொடர்முயற்சிகளால் வன்னிய குல ஷத்ரியர் என்று பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த சட்டநாதன் சாதியில் சத்திரியர் என்னும் பின்னொட்டு  இருக்கும்போதும் இவராகவே சூத்திரனின் கதை என்று தன்கதையை எழுதியிருப்பது ஏன்?ஏனெனில், பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் ஒரு இடமும் கதைக்குள் வருகிறது. வன்னியர்கள் சிறுபான்மையாக, ஆதிக்கம் இல்லாதவர்களாக இருக்கும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டநாதன். இதையும் நாம் கவனிக்கவேண்டியதாகிறது.ஆனாலும், இவர் தன் சாதி மீதான ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இருந்தவராக தென்படவில்லை. சாதிபேதங்களை வெறுப்பவராகவே இருந்திருக்கிறார்.

                                  இலக்கிய வாசிப்பின் வழியாக பல மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில், வெவ்வேறு ரூபங்களில் நிலைத்து நிற்கின்றனர். அதில் சட்டநாதனின் தாய்வழிப் பாட்டியும் சேர்ந்துகொள்கிறார். நூலில் முகப்பு அட்டையில் அமைந்துள்ள புகைப்படத்தில் தென்படுபவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை.

                                   சுயசரிதை என்பதை தமிழ்ப்படுத்தினால் தன் வரலாறு என்று எழுதப்படுகிறது. ஆனால் வரலாறாக ஆகமுடியாதவர்கள்கூட சுயசரிதை எழுதுவதாலும், மேலும் பொருத்தமான தமிழாக்கமாகவும் சுயசரிதை என்பதை தன்கதை என்று குறிப்பிடலாம் என்றே எண்ணுகிறேன்.

                                    சட்டநாதன் அவருடைய தன்கதையில், இடம்பெறும் பெரும்பாலான மனிதர்களின் பெயர்களை நேரடியாகப் பதிவு செய்யாமலேயே தவிர்த்திருக்கிறார்.குறிப்புப் பெயர்களாகவும், உறவுமுறைகள் பெயர்களாலுமே குறிப்பிடுகிறார்.

                              ஆனர்ஸ் படிப்பில் தன்னுடன் படித்த தோழிகளைப் பற்றியும், பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்றும் சொல்லும் இடம் வருகிறது.அப்போது, அவ்வளவாக படிப்புவராத ஒரு தோழி அரசியல்வாதியானதைப் பற்றி மிக இயல்பாகச் சொல்லும்போது, ரசிக்கும்படியாக உள்ளது.

                          சட்டநாதனை பார்ப்பனர் என்று எண்ணிக்கொண்டு வேலைதரும் ஒரு பார்ப்பனர், பின்னர் உண்மை தெரிந்தவுடன் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கொள்கிறார். அதே பார்ப்பனர்தான் பிறகு, சட்டநாதன் தன் இளைமைக்காலம் வரை  பல இன்னல்களையும், அவமானங்களையும் எந்த ஐ.சி.எஸ். படிப்பின் பொருட்டுப் பொறுத்துக்கொண்டு , கனவு கண்டுகொண்டிருந்தாரோ அந்த  ஐ.சி.எஸ். படிப்பிற்கே,    வாழ்க்கை இலட்சியத்திற்கே தடையாக நின்று சதி செய்கிறார். இந்தச் சம்பவம் சட்டநாதன் அவர்களின் வாழ்க்கையில் எப்படியொரு முக்கியமான இடமோ, அதுபோலவே சமூகத்தைப் பிரதிபலிப்பதிலும் முக்கியமான இடம். ஒருவர் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் எத்தனைதான் அறிவும், திறனும் பெற்றிருந்தபோதும் அவர் தாண்டவேண்டிய தடைகளும், தோல்விகளும், வாய்ப்புமறுப்புகளும், அவமானங்களும் சேர்ந்து முன்னேற்றத்தையே தடுத்துவிடுகிறது.உயர்சாதியினரைவிட மிகவும் போராடித்தான் வெற்றியை அடையமுடிகிறது.காணாமல்போகக்கூடியவர்களே நிறையபேர். அதையெல்லாம் கடந்து வெற்றி கண்டவர்களுடைய வரலாற்றில், மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது, திரிக்கப்பட்டது, பதிவு செய்யப்பாடாதது போன்றவற்றையெல்லாம் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருப்பவை சிலவே.

                                சிக்கல்களை உணர்ச்சி கலக்காமல், தெளிவாக அதன் ஆதாரம் நோக்கி சிந்திப்பவராகவும், செயல்திறனும், விடாமுயற்சியும் கொண்டவாராக இவர் இருந்தது, சிறுபிராய காலக்கட்டங்களிலேயே தென்படுகிறது.இதுவே, இவரது பின்னாளைய வளர்ச்சிக்கு ஆதாரமான காரணிகள். கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் படித்தவர் என்பதால் அதன் தேவையை நன்கு உணர்ந்திருக்க இவரால் முடிந்திருக்கும்.

சமூகத்தில் சாதி எவ்வளவு பெரிய காரணியாக இருக்கிறது என்பதை பல படிப்பினைகளின்மூலம் உணரமுடிவதுபோலவே, சட்டநாதனின் வாழ்க்கை மூலமும் அறிய முடிகிறது. ஆனால், அமைதியான முறையிலும், சார்பு நிலைகொள்ளாமலும்தான் சாதியைப் பற்றிய இடங்களிலெல்லாம் சட்டநாதன் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. சாதி பற்றி எழுதும்போது மட்டும் என்றில்லாமல்,எப்போதுமே தற்சார்பை நிலை நிறுத்தாமல் விலகி நின்றே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த நூலை வெளியிட்டமைக்காக காலச்சுவடு பதிப்பகமும், அதற்கு உறுதுணையாய் நின்றவர்களும், உழைத்தவர்களும் பாராட்டுக்குரிவர்கள். சட்ட நாதன் ஆற்றிய உரைகள், மற்றும் கட்டுரைகள் ஆகியவை இணைப்பாக அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒரு சூத்திரனின் கதை
சட்டநாதன் ஐ.ஏ.எ.ஸ்
தன் வரலாறு
காலச்சுவடு பதிப்பகம்

Tuesday, May 15, 2012

பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்


புனைவுக் கலையில் பூரண நிலை


ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள்.  ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மனிதர்களைப்போலவே, மண் சாமிகள்.தெய்வத்திலும்கூட சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்று மனிதர்களுக்குள் பிரிவினை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கண்மணி குணசேகரனின் அண்மைய சிறுகதைகளின் தொகுப்பு பூரணி பொற்கலை. மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதைகளுமே ஓரிழையை அடிப்படையாக, தொடர்ச்சியாகக் கொண்டு ஒரு வரிசையில் வைக்கத்தக்கவை.காவல் தெய்வமான அய்யனார்,அய்யனாரின் மனைவிகள் பூரணி, பொற்கலை, அய்யனாரின் சேவகர்கள், மற்றும் சிறுதெய்வங்கள் ஆகியோரை கதை மாந்தர்களாகவே  கொண்டு எழுதப்பட்டவை.மானுடர்களும், அமானுடர்களும் கதைகளுக்குள் கலவாமல் கலந்து கதை மாந்தர்களாகியிருக்கிறார்கள். இப்படி ஒரே சரடில் கற்பனைவளத்தோடு எழுதித்தள்ளும் திறன் இருப்பதை கண்மணி இலக்கிய உலகிற்கு இத்தொகுப்பின் மூலம் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

கண்மணி குணசேகரனுடையது யதார்த்த வகை எழுத்து. இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை யதார்த்த எழுத்தோடு சேர்த்தும், சற்று அதிலிருந்து மாறுபட்டும், இலக்கிய உத்திகளை மிக இயல்பாகச் சேர்த்துக்கொண்டும், புனைவுகளின் வழியாக வாசிப்பு சுவாரசியமளிக்கும் வகையில் எழுதப்பட்டவை இக்கதைகள்.யதார்த்தங்களிலிருந்து விலகிய புனைவுகளின் வழியாக இலக்கியம் செயல்படும்போது, அதற்கு பன்முகத்தன்மை அளிக்கும் சாத்தியங்கள் கூடுகிறது. கவிதைகளிலேயே இவ்வுத்தி பெருமளவில் செயல்படுகிறது. இத்தொகுப்புக் கதைகளிலும்  நாம் காணும் அய்யனார் மற்றும் சுற்றத்தினர் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக நமக்குக் காட்சியளிப்பார்கள். ‘ நாம வாழவச்ச மனுசாளுவோ, நம்ம வாழவச்சுப் பாக்காம வேரை வெட்டுதுங்க... வெந்நீரை ஊத்துதுங்க’ என்று சாமிகளே புலம்புவது, புறக்கணிக்கப்படுகிற பெற்றோர்களை, வாழ்ந்து கெட்டவர்களை, கலாச்சாரங்களை, கலைகளை என்று பல வகையில் நினைவுபடுத்திவிடுகிறார்கள். புனைவின் சாத்தியமே இங்குதான் சிறப்பாகச் செயல்படுகிறது.இவ்வாறு, சாமிகள் படிமங்களாக நின்று, பல்வேறு சூழலுக்குப் பொருந்திப்போகிறார்கள்.. பெண்ணியம் பேசுகிற, தலித்தியம் பேசுகிற, மாய யதார்த்தவாதம் என்கிற உத்திகளை இயல்பாக உள்ளடக்கிய,ஆனால் எளிமையாக சொல்லப்பட்ட கதைகள்.

நடைமுறை வாழ்வில் சாமிகள் எப்படி கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்? என்றொரு கேள்வியெழுவது இயல்புதான். குற்றவாளிக்கு உறுத்துகிற மனசாட்சியாகவும், அச்சுறுத்துகிற கனவாகவும், இயற்கை  நிகழ்வுகளின் காரணிகளாக கற்பிக்கப்படுபவர்களாகவும் வருகிறார்கள் சாமிகள்.

படையல் என்கிற கதையில் வீரனாருக்கும், அய்யனாருக்குமே சண்டை மூள்கிறது. மாமன், மச்சான் சண்டைதான். இடையில் சமரசம் செய்துவைப்பவள் பூரணிதான்.என்னதான் சாமிகளென்றாலும், அவர்களும் சராசரி மனிதர்களைப்போலவே நடந்துகொள்கிறார்கள். எனவே, இங்கே சாமிகள் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் , நெய்வேலியைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு பகுதியைச் சொல்கிறது, புழுதி எனும் கதை.

முன்பெல்லாம் மாட்டிறைச்சி  சற்று கமுக்கமான இடங்களில் விற்கப்பட்டு வந்தது.ஆனால், இன்று நகரங்களில்  நெரிசலான சாலையோரங்களில்கூட மாட்டிறைச்சி விற்கும் கடைகளும், அதில் வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சியும் பரவலாக காணமுடிகிறது. காலத்தால் ஏற்பட்டுள்ள இந்தச் சமூக நிலை மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய நுட்பமான, ஆவணமான ஒரு வாய்ப்பு ‘வேட்டை’ கதைக்குள் அமைந்திருக்கிறது.


உண்மை மனிதர்களுக்கும், சாமிகளுக்கும் தொடர்புபடுத்துகிற சந்தர்ப்பங்கள் புனைவின் உச்சம். பூரணி பொற்கலை கதையில் ஈயம் பூசும் குடும்பத்தைப் பார்த்து ஊர்த்தலைவன் மனம் பதைக்கும் இடம் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம் .உடனே அதற்குப் போட்டியாக அரண் கதையில், மீண்டும் குடிப்பழக்கத்தைத் தொட நினைப்பவனை விரட்டி வந்து காப்பாற்றும் குதிரையையும் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொள்ளும் வகையில் வரிசையில் தள்ளுமுள்ளு  கட்டி நிற்கின்றன.
நமது மண்ணின் சிறுதெய்வங்கள் வானத்திலிருந்து குதித்தவர்களில்லை. நம்மிடையே வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களேதான். அவர்கள் செய்த தியாகங்களுக்காகவும், வஞ்சிக்கப்பட்ட ஆறாத்துயரங்களுக்காகவும், வீரதீரச் செயல்களுக்காகவும் வழிவழியாக போற்றப்பட்டு வந்து சாமிகளாகவே ஆகிவிட்டவர்கள். இக்கருத்தை சுட்டிக்காட்டுவதுபோல், சுவர் என்கிற கதையில் வருகிற மலையம்மாள் என்கிற குலசாமியைப் பற்றிய தகவல் கதைக்குள்ளேயே வருகிறது.

வாழ்ந்துமறைந்த நமது முன்னோர்கள் என்பதால்தானோ என்னவோ அவர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன போலும்.அந்தவகையில், தமுக்கு வீரன் கதை ஒடுக்கப்பட்டவனின் எழுச்சியை, தலை நிமிர்வை முன்வைக்கிற கதை. ஒடுக்குபவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையும்கூட. நடு  நாட்டு வட்டார மொழியிலேயே சாமிகளும் பேசுவது புனைவின் சுவையைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் சமூகத்துக்கான செய்திகளாக, அறிவுறுத்தல்களாக அமைந்திருந்தாலும் அவை போதனைக் கதைகளைப்போல் அல்லாமல் இயல்பாக, உணர்த்துகிற வகையில் சொல்லிச்செல்கிறது.

ஆணிகளின் கதை என்கிற கதை மட்டும் கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பில் முன்னமே இடம்பெற்றது. என்றாலும், பொருத்தப்பாடு கருதி இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆணிகளின் கதை ஆவிகளின் கதைதான். இந்தக் கதையில் மட்டும் சாமிகளுக்குப் பதில் ஆவிகள். ஆவிகளின் கதைகள் நமக்கு உணர்த்துவதும்,சாமிகளின் கதை போலவேதான். குலசாமிகளின் கதைகளைப்போலவே, கதைகளில் வருகிற உவமைகளும் தனித்துவமான, மண்சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளிப்படும் உவமைகள்தான்.


நெகிழ்ச்சியான காட்சிகளாலும், உரையாடல்களாலும் அதேபோல்  அங்கதச் சுவையாலும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகின்றன கதைகள். வாசிப்பின்போது, மௌனக் கரை உடைத்து சிரிக்காமலும், தழுதழுக்காமலும் இக்கதைகளை படித்துவிடமுடியாது எனலாம்.

எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே அத்தகைய திறனை, இயல்பாகக் கொண்டு பிறக்கிறார்கள், அதுவொரு மானுட நிகழ்வு என்றொரு கூற்று உண்டு. (ஒருவேளை மகாகவிகளுக்குமகா எழுத்தாளர்களுக்கு இக்கூற்று பொருந்தலாம் என்பது என் எண்ணம். சிறந்த கவிகளாக, எழுத்தாளர்களாக உருவாக தீவிரமான முயற்சியும், பயிற்சியுமே போதும் என்று எண்ணுகிறேன்) இக்கதைகளை படிக்கிறபோது இக்கூற்று உண்மைதானோ என்று நம்பத்தோன்றுகிறது. கண்மணி குணசேகரன் என்கிற கலைஞனின் எழுத்து வல்லமைக்கு சிறந்தவொரு சான்றாக, வெற்றிச்சின்னமாக , பூரணி பொற்கலை சிறுகதைத் தொகுப்பு பெருமை சேர்க்கிறது.தமிழினி வெளியீடாக வந்திருக்கிற இத்தொகுப்பில் எழுத்துப்பிழைகள் சற்று தென்படுகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை அறிமுகமேயில்லாத நகர, மாநகர வாழ் மக்கள்கூட இக்கதைகளை வாசிப்பதன் வழியாக அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கதைகளை வாசித்தபிறகு சிற்றூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சிறுதெய்வங்களின் சிலைகளை வெறும் சிலைகளாக பார்க்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அச்சிலைகள் உயிர்பெற்று கற்பனைக் கண்களுக்குள் துள்ளித்திரியும்.