Thursday, March 18, 2010

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

1.எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களின் முதல்வரிசையில் வைக்கத்தகுந்த ஜே.பி.சாணக்யாவை நான் ஏன் இவ்வளவு நாட்கள் அறியாமல்போனேன்?

2.எனக்கு படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும், பகிரும் நண்பர்கள் ஜே.பி.சாணக்யாவை ஏன் என்னிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் பரிந்துரைக்கவில்லை?

3.ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் அளவுக்கு ஜே.பி.சாணக்யா ஏன் பிரபலமானவராயில்லை?

4.எனக்குத் தெரிந்த இதழாசிரியர் ஒருவர் ஜே.பி.சாணக்யாவிடம் கதை கேட்டபோது,' நான் பொருளாதார நிலையில் மிகவும் நலிந்துள்ளேன். எனக்குப் பணம் கொடுத்தால் (சில நூறுகள்)மட்டுமே எழுதமுடியும். பணம் பெற்ற பிறகுதான் எழுதவேத் துவங்குவேன்' என்றாராம்.அற்புதமான கதைகளை எழுதியிருக்கிற ஜே.பி.சாணக்யா என்கிற கலைஞனிடமிருந்து மேலும் கதைகள் வருவதைத் தடுப்பதும், தீர்மானிப்பதும் சில நூறு ரூபாய்கள்தான் என்கிற நிலை தமிழ் இலக்கியத்திற்கு நல்ல சூழல்தானா?

5.என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கள் கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால் ( அவ்வப்போது மற்றும் பலர்)ஆகியோரை தொடர்ந்து முன்னிறுத்துவதைப்போல் ஏன் ஜே.பி.சாணக்யா பற்றி எழுதவில்லை?

6.ஓடோடிப்போய் ஜே.பி.சாணக்யாவைச் சந்திக்கும் ஆர்வம் எழுந்தாலும் சந்திப்பது சரியாகுமா? ஏற்கனவே சந்தித்த சில படைப்பாளிகள் பற்றிய என் மனப்பிம்பம் நேரில் சிதைந்துபோனதைப்போல் ஜே.பி.சாணக்யா விசயத்திலும் ஏற்பட்டுவிட்டால், அதனால் நட்டம் எனக்குத்தானே?

7.அவருக்கு இதுவரை கதா விருது என்ற ஒன்றைத் தவிர ஏன் மேலும் கிடைக்கப்பெறவில்லை?

8.திரைத்துறையில் ஆண்டுகள் கணக்கில் முயற்சி செய்துகொண்டும் இப்படியொரு ஆளுமை ஏன் இன்னும் அடையாளம் பெறவில்லை?

9. தடாகம் வலைத்தள கட்டுரையில் ‘ கனவுப் புத்தகம்' தொகுப்பை படிப்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக எழுதிவிட்டோமே.அதையும் படித்துவிட்டு எழுதியிருப்பதுதானே இன்னும் நன்றாக இருந்திருக்கும்?( இப்போது முடித்துவிட்டேன்)

10. இலக்கிய வாசிப்பு இல்லாத நண்பர்களிடம்கூட ஜே.பி.சாணக்யாவைப் படித்துப்பாருங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் என் வேலை வீணானதோ?


பின்குறிப்பு
இவையெல்லாம் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள். அறிவுப்பூர்வமாக அலசினால் தக்க விடைகளும், விவாதங்களும் கிடைக்கப் பெறலாம். ஆனால், ஜே.பி.சாணக்யாவை அறிமுகப்படுத்த நான் கையாண்டிருக்கும் வெளிப்பாட்டு உத்தி மட்டுமே இது.

19 comments:

MSK / Saravana said...

அவருடைய கனவுப்புத்தகம் படித்த போதே தெரிந்துவிட்டது. ஒரு நல்ல படைப்பாளி என்று.
இதைப்பற்றி சில வரிகள் இந்த பதிவில் எழுதி இருந்தேன்.

http://msaravanakumar.blogspot.com/2010/01/blog-post_06.html


மேலும் இங்கு பதிவுலகில் அதிகம் பேசப்படுபவர்கள் சாரு, ஜெ மோ, எஸ் ரா மட்டுமே.

ரமேஷ் பிரேமை கூட அதிகம் பேசுபவர்கள் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

லேகா said...

உங்கள் ஆதங்கம் சரியானதே!

இவரின் கனவு புத்தகம் மற்றும் ஆண்களின் படித்துறை இரு சிறுகதை தொகுப்புகளும் நான் ரசித்து படித்தவை.உடல்மொழி கதைகளை வெகு நேர்த்தியாய் புனைவது சாணக்யாவின் சிறப்பு.

சாணக்யாவின் "கனவு புத்தகம்" குறித்த எனது பதிவு.

http://yalisai.blogspot.com/2008/12/blog-post_12.html

பெருமாள் முருகன்,இமயம் போன்ற எழுத்தாளர்களும் இங்கு அதிகம் அறியப்படவில்லை.
எழுத்துலக அரசியலில் இருந்து இவர்கள் விலகி இருப்பதால் கூட இருக்கலாம்.

லேகா said...

எனது முந்தைய பின்னூட்டத்தில் "என் வீட்டின் வரை படம்" என்பதிற்கு பதிலாக "ஆண்களின் படித்துறை" என குறிப்பிட்டு விட்டேன் :-(

நேசமித்ரன் said...

குழு அரசியல், மார்க்கெட்டிங் வித்தை, இலக்கிய கூட்டங்களுக்குப் போய் மேதமை காட்டி உயர்ந்து நவில இயலாத சூழல், உள்ளே அதிகம் பேசும் இயல்புடைய கலைஞனுக்கு பாசாங்கு வாய்க்கவில்லை முத்துவேல் .மேலும் இத்தகைய கதை வேண்டும் என்று சொல்லி சிருஷ்டிக்கும் சூழலும்(சிருஷ்டிக் குறைபாடு அல்ல ) இருந்ததாக சொல்லக் கேட்டிருக்கிறேன்

பாலா said...

இப்போ வெளியான கல்குதிரைல அவரோட " முதல் தனிமை" சிறுகதை அற்புதங்க
கல்குதிரை மூலம்தான் எனக்கு அவர் எழுத்து அறிமுகமே
நன்றி எனக்கு மேல ஒருத்தர் கமெண்ட் போட்டுருகார்ல அவருக்கு

உண்மைத்தமிழன் said...

ஜே.பி.சாணக்யாவின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சோகத்தைக் கொண்டது. நிறைய எழுதிக் கொடுத்து அவர் சம்பாதித்தது வெறுமைதான்..!

அதனால்தான் இப்போது பணம் கொடுத்தால் மட்டுமே எழுத்து என்பதில் உறுதியாக இருக்கிறார்..!

இதிலொன்றும் தவறில்லை..!

ஆனால் இந்த படைப்பாளியையும் வழக்கம்போல பதிப்பகங்கள் கூலிக்கு மாரடிக்கத்தான் கூப்பிடுகின்றன..!

Anonymous said...

முத்து,

ஜே பி சாணக்யா மிக முக்கியமான படைப்பாளி. ஆனால் அவருக்குத் தன்னை மார்க்கெட் செய்துகொள்ளத் தெரியவில்லை.

என்னதான் தரமான பொருளாக இருந்தாலும் சந்தையில் விலை போக நல்ல பேக்கேஜிங் அவசியம்.

ஆனால் நால்ல திறமைசாலிகள் இதுபோல உதாசீனப்படுத்தப்படுவதும், சுமாரான எழுத்தாளர்கள் இலக்கிய இதழ்களால் தூக்கிப் பிடிக்கப்படுவதும் தமிழின் சாபக்கேடு.

நந்தாகுமாரன் said...

நன்றி

ச.முத்துவேல் said...

@சரவணகுமார்

நலமா? உங்களின் அந்தப் பதிவை வெளியானபோதே படித்திருக்கிறேன்.
சில விடுபடல்களைத் தவிர பெரும்பாலோர், பிரபலமடையாததற்கு தகுந்த காரணங்கள் இருக்கவே செய்கின்றன.மிகவும் போட்டியான உலகம் இது அல்லவா?
நன்றி.

@லேகா

நல்வரவு லேகா

/எனது முந்தைய பின்னூட்டத்தில் "என் வீட்டின் வரை படம்" என்பதிற்கு பதிலாக "ஆண்களின் படித்துறை" என குறிப்பிட்டு விட்டேன் :-(/

அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைதான் ஆ.ப.துறை

நன்றி லேகா.

@ நேசமித்ரன்

பொதுவான காரணங்கள் யூகிக்கக்கூடியவை. ஆனால் கடைசியாக நீங்கள் சொல்லியிருக்கும் தனிப்பட்ட காரணம் இப்போதுதான் அறிகிறேன்.
நன்றி நேசன்

@ பாலா
நல்வரவு பாலா.ஓ ! நேசன்தான் அந்த புண்ணீயவாதியோ! நல்ல விசயம்.
கல்குதிரை கதை படித்து நானும் சொக்கித்தான் போனேன். நன்றி பாலா.

@உண்மைத்தமிழன்

வாங்க தலைவரே! என்ன நம்ம பக்கமெல்லாம்? ஆச்சரியமா இருக்குதே! மகிழ்ச்சி.
அவரின் நிலைப்பாட்டை நானும் சரியென்றுதான் சொல்கிறேன். ஆனால், இப்படி அவரை நிர்ப்பந்திக்கும் இலக்கியச் சூழல் எத்தனை மோசமானது? அல்லவா?
நன்றி.

@வடகரைவேலன்
ஆமாம் அண்ணாச்சி. நீங்க சொல்றதுதான் நிதர்சனம்.அதுனால நல்ல பிராண்ட் அனுபவிச்ச நம்மல்லாம் அதை எடுத்துச் சொல்லி மார்க்கெட்டிங் கொஞ்சம் பண்ணுறோம்.இதுனால எல்லா வகையிலும் நன்மைதானே. நன்றி அண்ணாச்சி.

@ நந்தா

நன்றி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படித்ததில்லை.

Ashok D said...

இங்கே சிலர் குறிப்பிட்ட எவரையும் யான் அறிந்துயிருக்கவில்லை என்பது வரமா.. இழப்பா என தெரியவில்லை..

ச.முத்துவேல் said...

@ ஸ்ரீ
அவசியம் படிக்கவேண்டியவர் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவே. நன்றி

@ அஷோக்
நிச்சயம் இழப்புதான் நண்பா. நன்றி அஷோக்.

Anonymous said...

ஜெயமோகன் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார். 'புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள்: தமிழ்ச்சிறுகதை இன்று' (Jan 2008 )என்ற தலைப்பில்.

ச.முத்துவேல் said...

@அனானி
தகவலுக்கு நன்றி. (நான் இதை எழுதுவதற்கு முன் அவரின் வலைத்தளத்தில் ஜே.பி.சாணக்யா பெயரைக் கொடுத்துத் தேடிப்பார்த்து ஒன்றுமில்லை என்று இருந்தேன்.அவர், ஜெ.பி. என்று எழுதியிருப்பதால், கிடைக்காமல் போனது.)

இதற்குப்பிறகு நான் அந்த இடுகையைத் தேடிப்படித்தேன். இதற்கும் முன்னரே படித்ததுதான் அது.அவர் பெயர் சொல்லப்பட்டதை மறந்துவிட்டேன்.மேலும்,சுட்டிக்காட்டுவது வேறு, வலியுறுத்துவது வேறு.
வலியுறுத்துவதையும் ஏன் அவர் செய்யவில்லை என்று நான் கேட்டது, அவர் மேல் உள்ள எதிர்பார்ப்பில். சக படைப்பாளீகளை முன்னிறுத்தி, அறிமுகப்படுத்தி, பரிந்துரைப்பதையெல்லாம் நாம் ஜெமோவிடம்தானே எதிர்பார்க்கமுடியும்.

மேலும், ஜே.பி.சாணக்யா பற்றிய அவரின் மதிப்பீடுகளுக்கு நானொன்றும் குறுக்கிட முடியாது. செய்யவும் மாட்டேன். எனக்குப் பிடித்திருந்தால், அவருக்கும் பிடிக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்.என் பக்குவம் எனபது அவருடன் ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை எனலாம்.

பின்குறிப்பில், இவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன் என்று நினைத்தேன். நீங்களும், குறையாகச் சுட்டிக்காட்டாமல், தகவலாகத்தானே சொல்கிறீர்கள். அதற்காகவும், வருகை தந்து கருத்துரைத்ததற்கும் நன்றி.

நிலாரசிகன் said...

நாம் பேசியிருக்கிறோம். சட்டென்று தோன்றி மறையும் மின்னலென. கனவுப்புத்தகம் அற்புதமான சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

//10. இலக்கிய வாசிப்பு இல்லாத நண்பர்களிடம்கூட ஜே.பி.சாணக்யாவைப் படித்துப்பாருங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் என் வேலை வீணானதோ?
//

வீணானதே. இலக்கிய வாசிப்பு இல்லாதவர்களால் இவரது கதைகளை புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே!

ச.முத்துவேல் said...

@ நிலாரசிகன்
நன்றி நிலா.

பனித்துளி சங்கர் said...

அறிமுகத்திற்கு நன்றி .
ஒரு சாதாரண வாசகனால் இவரின் எழுத்துகளை புரிந்துகொள்ளமுடியும் என்பது கேள்விக்குறியே !

ச.முத்துவேல் said...

@ பனித்துளி சங்கர்

நீங்கள் இவரின் கதைகளைப் படித்திருக்கிறீர்கள்தானே? சில கதைகளைத் தவிர, பெரும்பாலான கதைகள் மிக எளிமையாகவே புரியும். வணீக இதழ்களில்கூட இடம்பெறக் கூடிய எளிமை.

நண்பர் நிலாரசிகனுடைய பின்னூட்டத்திற்கான பதிலிலேயே இதைச் சொல்ல விரும்பினேன்.

நன்றி.

Anonymous said...

// பின்குறிப்பில், இவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன் என்று நினைத்தேன். நீங்களும், குறையாகச் சுட்டிக்காட்டாமல், தகவலாகத்தானே சொல்கிறீர்கள். அதற்காகவும், வருகை தந்து கருத்துரைத்ததற்கும் நன்றி.//

நிச்சயமாக குறையாக இல்லை நண்பரே. ஜெ.மோ 'ஏன் வலியுறுத்தவில்லை?' என்பதற்கான காரணம், அந்த கட்டுரையில் இருந்ததாக நான் நினைத்ததால்தான். புரிதலுக்கும், மறுமொழிக்கும் நன்றி.