Thursday, March 18, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் -ஜே.பி.சாணக்யா

படைப்பாளிகள் அறிமுகம் - .முத்துவேல்

ஜே.பி.சாணக்யா

கவிதை எழுதுவது என்பதே முதலாளித்துவம்தான் என்று அண்மையில் எங்கோ படித்திருந்தேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத்தெரியவில்லை.அதற்குள் செல்ல விரும்பவுமில்லை. ஆனால், வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மனிதர்கள்தான் என்றே நான் கருதுகிறேன்.இதனால்தானோ என்னவோ, இதுவரையிலும் பதிவாகியுள்ள இலக்கியப் பதிவுகளில் அதிகமும் நடுத்தர மக்கள் வாழ்வே பதிவாகியுள்ளது. கீழ் நிலை என்று நாம் எண்ணத்தக்க மனிதர்களுக்கும் கீழான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் இருண்ட வாழ்வை, நிழல் உலகத்தை நாம் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.

நம் கண்களில் பட்டாலும், நம்மால் கவனம் குவிக்கப்படாத, அசட்டை செய்யப்படுகிற மனிதர்களே ஜே.பி.சாணக்யாவின் பெரும்பாலான கதைகளின் மாந்தர்கள்.சமூகத்தின் பார்வையில் கீழ் நிலையில் உள்ளவர்கள், குற்றவாளிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாக உள்ள மனிதர்களை சுற்றிச் சுற்றி வந்து கதைகள் பின்னப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஈர்ப்பும்,ஒருவிதப் பரபரப்பும் ,அதிர்ச்சியும் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.இவரின் ஒவ்வொரு கதையுமே உலுக்கிவிடும் அதிர்வுகளையும், பிரமாண்டத்தையும் வெகுவாக ஏற்படுத்தக்கூடியவை. அதனாலேயே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, நெஞ்சில் உறைந்து நின்றுவிடக் கூடியவை.இவர் கதைகளில் உள்ள சம்பவங்களும், மனிதர்களும் கற்பனையாகவே இருந்துவிடக்கூடாதா என்ற இரக்கத்தையும்,பதற்றத்தையும் உண்டாக்கக்கூடியவை.

ஒரு சிறுகதையை பொருத்தமுள்ள வகையில் நீளமாகவும், ஒலி, ஒளிக் காட்சிகளோடு பார்த்து அனுபவித்த வகையில் உணரச் செய்யும் துல்லியத்தோடும், விவரணைகளோடும் எழுதுபவர் இவர். துல்லியமாக எழுதும் அதேசமயத்தில் நவீன இலக்கியத்திற்கேயுரிய ஒரு அம்சமான புதிர்த்தன்மையோடு எழுதுவதும் வாசகருக்குக் கூடுதல் பரிமாணத்தை அளிப்பவை. பிரமாண்டமும்,வசீகரமும், கவித்துவமும் கொண்டுள்ள மொழி நடை இவருடையது. ஒழுக்கம், காமம் ஆகியவற்றின் மீதான சமூக மதிப்பீடுகளை தன் கதைகளின் வழியாகக் கேள்விக்குட்படுத்துபவர்.

ஜே.பி.சாணக்யா 1973ல் கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் எம்.அப்பாத்துரை,எம்.கே. தெய்வக்கன்னி. இருவருமே ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.சிதம்பரம் நடராஜர் சன்னதியில் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப் பயிற்சியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டும் பயின்ற இவர் ஓவியரும்கூட.

தற்போது, சென்னையில் தங்கி தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரின் சிறுகதைத்தொகுப்புகள்

1. என் வீட்டின் வரைபடம் ( காலச்சுவடு)
2. கனவுப்புத்தகம் ( காலச்சுவடு)


தொடர்ந்து சிறுகதைத் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.கதா விருது பெற்றவர்.


இணையத்தில் வாசிக்க

1. ‘சித்திரச் சாலைகள்'- சிறுகதை

2. பூதக்கண்ணாடி- சிறுகதை



(என் வீட்டின் வரைபடம் தொகுப்பு மற்றும் சில கதைகளை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டது)

நன்றி - தடாகம்

4 comments:

நேசமித்ரன் said...

புலன் நுகர்வின் தர்க்கங்கள் உடலின் அரசியல் குறித்துப் பேசும் கதைகள் மிகுதி என்பது என் நிலைப்பாடு முத்துவேல் நல்ல பகிர்வும் பதிவும்

நந்தாகுமாரன் said...

இப்படி அதிகம் அறியப்படாத படைப்பாளிகளை அதிகம் அறிமுகப்படுத்துங்கள்

Karthikeyan G said...

thanks for sharing.. :)

ச.முத்துவேல் said...

@நேசமித்ரன்

உங்கள் நிலைப்பாடும் சரியே. நன்றி

@ நந்தா

ஆமாம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், சமயங்களில், படித்துக்கொண்டிருக்கும் நபர்களைப் பற்றியும் எழுதிவிட நேர்கிறது.

@ கார்த்திகேயன்
நன்றி.