Wednesday, December 30, 2009

படித்ததில் பிடித்த சிறுகதைகள்-2009

2009 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளில், நான் படித்தவற்றில் மட்டுமேயிருந்து, எனக்குப் பிடித்த சில சிறுகதைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.இது நிச்சயம் ஒரு முழுமையான பட்டியலாகிவிடமுடியாது.இது தரவரிசையின் அடிப்படிடையிலானதுமல்ல. நினைவிலிருந்தே இவற்றை எழுதுவதால் விடுபடல்களும் இருக்கலாம்.

இக் கதைகள் எழுதப்பட்டவிதம் குறித்த என் வியப்பே, இந்தப் பட்டியலின் முதல்காரணியாக இருக்கிறது.பிறகே, அதன் உள்ளடக்கம், சொல்முறை, தளம்,செறிவு, உத்தி, தகவல்கள் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தியிருக்கிறேன்.

1. பொம்மைக்காரி- பாவண்ணன் உயிர் எழுத்து(ஜூன்)
2. வெள்ளம் பாவண்ணன் வார்த்தை(ஆகஸ்ட்)
3. விஷக்கோப்பை யுவன்சந்திரசேகர்- வார்த்தை(ஜூன்)
4. புகைக்கண்ணர்களின் தேசம்- அ.முத்துலிங்கம்-வார்த்தை(ஜூலை)
5. எந்தங்கம் என்னையக் கொல்லுதாமா-வா.மு.கோமு-சுகன்(ஆகஸ்ட்)
6. காட்டின் பெருங்கனவு- சந்திரா-உயிர் எழுத்து(ஆகஸ்ட்)
7. வெளிறிய அந்திமாலை-குமாரநந்தன்- காலச்சுவடு.(டிசம்பர்)
8. ரவிக்கைக்குள் மறையும் வனம்-லக்‌ஷ்மி சரவணக்குமார்-அக நாழிகை,டிசம்பர்
9. அம்மாவின் யுத்தம்- நா.விச்வநாதன் உயிர் எழுத்து
10. வெயில் தோரணம்-ச.குமார்-உயிர் எழுத்து(டிசம்பர்)
11. வேட்டை- கண்மணி குணசேகரன் - மணல்வீடு(டிசம்பர்)


மேலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் மூன்று சிறுகதைகளும் பிடித்திருந்தது.மிருகத்தனம், அப்பா புகைக்கிறார், மற்றும் ஒன்று.


இவை தவிர இருள் விலகும் கதைகள் என்கிற சிறுகதைத் தொகுப்பும் இந்த ஆண்டிலேயே வெளியானது. இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் எந்த இதழிலும் வெளியிடப்படாமல், நேரடியாகத் தொகுப்பிலேயே வெளிவந்தவை.அந்த வகையில் இத்தொகுப்பையும் 2009 ஆம் ஆண்டு கணக்கிலேயே எடுத்துக்கொள்கிறேன். நல்ல கதைகளை அடக்கிய சிறுகதைத்தொகுப்பு.





Tuesday, December 29, 2009

தாலிப்பனை(கூந்தப்பனை) படங்கள்









படம் 6 ல் இருப்பது வழக்கமான பனை


படம் 7 ல் இருக்கும் வேட்டிக் கட்டிய பெரியவர் சொன்ன தகவல்கள்.
தாலிப்பனை காய்க்க நூறு வருடங்களாகுமாம். காய்த்தபின் இறந்துவிடுமாம்.கோயில் இருக்கும் இடங்களில்தான் இருக்குமாம்.(மஞ்சள் கட்டிடம் கோயில்தான்).கூந்தப்பனை என்பது படத்திலிருப்பதல்ல,வேறு என்றார்.இப்போது பார்க்கும் இம்மரத்திற்குப்பக்கத்திலேயே, இதற்குமுன் வேறொரு மரம் இருந்ததாகவும், அதை குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்து புகைப்படம் எடுத்து முன்னர் வெளியிட்டிருந்ததாகவும் சொன்னார்.மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொண்டால் நன்றாகயிருக்கும்.
தொடர்புடைய பதிவு-http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

Monday, December 21, 2009

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-மௌனி

என் பார்வையில் படைப்பாளிகள்
மௌனி-இழந்த காதலின் சஞ்சலங்கள்
mauni

சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழ்ந்துரைக்கப்பட்டவர் மௌனி. நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர்.மணிக்கொடி காலத்திலிருந்தே(1932-38) எழுதத் தொடங்கியவர்.பி.எஸ்.ராமையாவால் எழுதத்தூண்டப்பட்டு அவராலேயே மணி என்கிற இயற்பெயரிலிருந்து மௌனியாக்கப்பட்டவர்.

அச்சில் கிடைக்கும் 24 சிறுகதைகளை மட்டுமே எழுதிய இவரை நவீனத்தமிழிலக்கிய உலகம் இன்றைக்கும் கொண்டாடியும் அதேசமயம் எதிர்மறையான விமர்சனங்களும் எழுப்பிக்கொண்டுமிருக்கிறது. அவர் காலம் முதல் இன்றைக்கும் இந்நிலை தொடர்கிறது. மௌனியின் தனித்துவம் என்பது அவர் எழுதியிருக்கும் விதம்தான். மௌனி எழுதியக் காலக்கட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.


”மௌனி அவர்கள் கணித்ததில் பட்டம் பெற்றவர்.ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர். சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்.தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.மௌனியின் ஆளுமை கணிதத்தில் ஏற்பட்ட அறிவு நுட்பமும், சங்கீதத்தில் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும் இத்தனையும் அடங்கியது” என்கிறார் கி.அ.சச்சிதானந்தம்.


மௌனியின் கதைகளைப் படித்துவிட்டு முதல் வாசிப்பில் புரியவில்லை, பிடிக்கவில்லை என்று புகழ்பெற்ற படைப்பாளிகளே சொல்லியிருக்கிறார்கள். உணர்ந்திருக்கிறார்கள்.அதுதான் மௌனியின் எழுத்து.இவர் கதைகளில் மனம், மனவோட்டங்களே பிரதானமாயிருக்கிறது.பெரும்பாலான கதைகள் உரையாடல்தன்மை மிகச் சொற்பமே கொண்டிருக்கிறது. உரையாடல்களற்ற மனவோட்டங்கள் மிகை உணர்ச்சியில் சஞ்சலத்துடனும், கவித்துவங்களோடும் மனம் போகும் போக்கிலேயே தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.ஒன்றிப் படிக்கவேண்டியது அவசியம். ஒருமுறைக்கு மேல் படித்தால் புரியும் கதைகள் அதிகம்.இரண்டாவதுமுறை படிக்கும்போது மிக எளிதாகவும், விரைவாகவும் நகரமுடிவது ஆச்சரியமளிக்கும் அனுபவம். 1930 களிலான மொழி இன்று எவ்வளவு மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை இவர் கதைகளைப் படிக்கும்போது நன்கு உணரமுடிகிறது.தண்ணீர் என்றே சொல்லப்படாமல் ஜலம் என்றும் யோசனை என்கிற பதம் யோஜனை என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு ஒருவித சலிப்பைத் தருகிறது. மௌனியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைப்போலவே, அவர்களது வாழ்வும், சூழலும் ஒரே மாதிரியாகவே இருப்பதால் சில கதைகளில் குழப்பம் ஏற்படுகிறது. மனதில் நிற்கமுடியாமல் போகிறது.தீர்க்கமாய் இன்னதென்று சொல்லிவிடாமல் புதிரானதாகவே எழுதப்பட்டிருப்பது வாசிப்பில் தேர்ச்சியைக் கோருகிறது.

காதலுக்குரியவர்களையும், நெருங்கியவர்களுமான உறவுகளையும் இழந்து தவிக்கும் மனதின் சஞ்சலமும், தனிமையும், அதே சூழலில் நீடித்திருக்க விரும்பும் எண்ணமும் கொண்ட கதாபாத்திரங்கள் அதிகமாய் தென்படுகிறது. பகடி செய்யும் பண்பு இவர் கதைகளில் பரவலாக உண்டு.அழியா சுடர், பிரபஞ்ச கானம், மாறுதல், ஆகிய கதைகள் குறிப்பிடத்தகுந்ததும் புகழ்பெற்றதுமாகும். மேலும் மனக்கோட்டை, கொஞ்ச தூரம் ஆகிய கதைகளும் குறிப்பிடத்தகுந்தவை.முதல் வாசிப்பிலேயே புரியத்தக்க சில எளிய கதைகளும் எழுதியிருக்கிறார்.'இந்நேரம்,இந்நேரம்' என்கிற சிறுகதையில் கதைக்குத் தொடர்பற்றதாகவே வருகிறது மிராசுதாரர்(பிராமணர்) பாத்திரம் . கதையின் நாயகனான செல்லக்கண்ணு படையாச்சி என்கிற பண்ணையாள் இளைஞன், கொஞ்சம் கரடுமுரடான வேலைகளுக்கு பறையர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைப்பதாக எழுதியிருக்கிறார் மௌனி. கதைக்கு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் சித்தரிப்பு வர்க்கபேதத்தை, சாதிகளின் படி நிலைகளைக் காட்டுவதற்காகவே எழுதபட்டிருப்பதுபோல் தோன்றச்செய்கிறது. ஆனால், அதே நேரத்தில் மிஸ்டேக் என்னும் கதையில் படி நிலையில் வேறுபட்ட மனிதர்களை முன்வைத்து அவர்களுக்குள் இருக்கும் போலியான செய்கைகளையும், பிழைப்புவாதத்தையும் கேலிக்குட்படுத்துவதன் மூலம் இன்னொரு கோணத்தை அளிக்கிறார்.”மாறாட்டம்”, ”சுந்தரி” போன்ற கதைகள் மிகச் சாதாரணமாகவேப் படுகிறது.சலிப்பாகக் கூட இருக்கிறது.”உறவு, பந்தம், பாசம்', ;குடை நிழல்' நினைவுச்சுவடு ஆகிய கதைகள் தாசிகள் கதாபாத்திரங்களாக வரும் கதைகள்.ஆங்கிலத்தில் கடவுளைக் குறிப்பிடும்போது , வாக்கியங்களின் இடையில் வந்தாலும் He என்ற பெரிய எழுத்திலேயே குறிப்பிடுவது மரபு. அதையே பின்பற்றுவதுபோல், மௌனி தன்னுடைய கதைகளில் கடவுளைக் குறிப்பிடும் இடங்களில் 'அவன்' என்று தடிமன் எழுத்துக்களில் எழுதுகிறார்.

மௌனி பற்றிய நிறை, குறை என்று வாதிடுபவர்களின் கூற்றுகளில், இரு தரப்பிலுமே நியாயம் இருக்கமுடியும்.ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றிய அபிப்பிராயங்களையும் சுய வாசிப்பனுவத்தின் மூலமே கண்டடைவது மிகச் சரி.


1907 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் பிறந்தார். 1926 வரையில் கும்பகோணத்தில் படித்த பிறகு 1929 வரையில் திருச்சியில் படித்து, வேலைக்கொன்றும் போகாமல் 1943 வரையில் கும்பகோணத்தில் தன் வீட்டில் வசித்தார். பிறகு தனது பிதுராஜித நிலம் தொழிலை கவனிக்க சிதம்பரம் வந்து, அங்கேயே வாழ்ந்து 1985- ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று காலமானார்.

நன்றி- தடாகம்

Wednesday, December 16, 2009

கூத்தப்பனையும், முத்தூவெல்லும்

                                             மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.ஜெயமோகனின் இணையதளத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாசித்துவருவதின் வழியாக, சு.வேணுகோபால் அவர்கள் பெயரையும், அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த முக்கியமான படைப்பாளி என்று மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், அதுவரை அவரின் ஆக்கங்கள் எதையும் படித்ததில்லையாதலால் அவரோடு என்னால் கலந்துரையாடமுடியாமல் போனது. நண்பர் கும்கி மற்றும் அவரின் நண்பரொருவர் ஆகிய இருவரும் சு.வேணுகோபாலை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர்.திரும்பிவந்த கும்கி, என்னிடம் வேணுகோபால் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரின் ‘கூந்தப்பனை’ பற்றியும் மற்ற சில ஆக்கங்களை பற்றியும் எனக்குச் சொன்னார். நான் அப்போதுதான் ‘கூந்தப்பனை’ என்கிற சொல்லையே முதன்முதலாக அறிகிறவனாயிருந்தேன். மாநகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நகரத்தில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நான் , முதன்முதலில் குயிலைப் பார்த்ததே சென்னையில்தான்.கிட்டத்தட்ட இருபது வயதில்தான். நான் பிறந்த நகரத்தை இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.

பிறகான சில நாட்களில் கூந்தப்பனை என்கிற சொல் எப்படியோ கூத்தப்பனை என்றே என் நெஞ்சில் நிலைத்துவிட்டது.இதற்கிடையில் சு.வேணுகோபாலின் சிறுகதைத் தொகுப்பான ‘களவு போகும் புரவிகள்’ லிருந்து இரண்டு கதைகளை மட்டும் படித்திருந்தேன். மிகவும் தாவித்தாவிச் செல்கிறபடியும், வாசிப்பில் பொறுமையையும், தேர்ச்சியையும் கோரும் வகையில் இருந்தமையாலும் அதற்குமேல் அப்போதைக்கு படிக்கமுடியாமல் ஒத்திவைத்தேன்.பிறகு ‘சாயாவனம்’ நாவலைப் படிக்கிறபோது, அதில் கூந்தல்பனை என்கிற சொல்லைக் கண்டபோது, நினைவிலிருந்த கூத்தப்பனையை மீட்டு கூந்தப்பனை என்பதாக சரிசெய்துகொண்டேன். கூத்தப்பனை என்று ஒரு சொல்லே கிடையாது என்று தெரிந்திருந்தால்தானே, அச்சொல்லிலிருக்கும் பிழையை என்னால் மாற்றிக்கொள்ள முடியும். என்னுடன் பணிபுரியும் வட இந்தியர் ஒருவர் என் பெயரை முத்தூ வெல் என்பார். அதுபோல்தான் இருக்கிறது இது.

இதற்குப்பிறகு என்னுடன் பணிபுரியும் என் வயது நண்பர்கள் சிலரிடம், அவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து, நிலப்பகுதிகளிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் கூந்தப்பனை என்பதுபற்றி விசாரித்தேன். கூந்தப்பனை என்று சொல்வதா அல்லது கூந்தல்பனை என்று சொல்வதா என்கிற சிறிய தடுமாற்றம் வேறு. என்னைப்போலவே நண்பர்கள் சிலருக்கும் தெரியவில்லை. ஒரேயொருவன் மட்டும் தாலிப்பனை என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் சொன்னான்.அவன் வடதமிழ் நாட்டுப்பகுதியைச் சேர்ந்தவன்.அதன்பிறகு கிராமவாசியானவரும், வயதில் மூத்தவரும், உள்ளுர்க்காரருமான ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும் ,மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது. வாய்ப்பிருந்தால் பிறகொருமுறை புகைப்படம் எடுத்து இணைக்கிறேன்.
இன்னொரு உள்ளூர்க்காரர் இதன் பெயர் தாலிப்பனை என்றார். வட்டாரம் சார்ந்த சொல்லாடல்போல. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் படிப்பதன் மூலம் இப்படியாவது ஏதாவது நடந்தால் சரி.
ஜெயமோகன் , அண்மையில் எழுதியிருக்கிற ‘சு. வேணுகோலின் மண்’ என்கிற பதிவில், கூந்தப்பனை பற்றிய படிம பிரயோகத்தை, வெளியிட்டிருந்த இடம் கூந்தப்பனை ஆக்கததை படிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளது.

Tuesday, December 15, 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

Manalveedu

 

அழைப்பிதழ்


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா


நாள் :26 டிசம்பர் 2009
சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி
இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214


பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரி


தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள
முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.
நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.
இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு


தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)
முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.
நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்
அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை
களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.
வரவேற்புரை: தக்கை.வே.பாபு
துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை


கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்
வாழ்த்துவோர்:
முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்
சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்
நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்
நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்
வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.
மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி


நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)
நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)


அமர்வு4- இரவு 10 மணி


மதுரை வீரன் (தெருக்கூத்து)
நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.
(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50


சான்றிதழ் மற்றும் விருது பெறுவோர்.
1.அமரர் மகாலிங்கம்
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 60 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : வீரன், கூத்து : மதுரை வீரன்
2. துரைசாமி
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சின்னான், கூத்து : மதுரை வீரன்
3. மட்டம்பட்டி பழனி, சங¢ககிரி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : நாக கன்னி. கூத்து : அரவான் கடப்பலி
4. துரைசாமி
நல்லம்பள்ளி,
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : இரண்யன். கூத்து : இரண்ய சம்ஹாரம்
5. சின்னத்தம்பி
பென்னாகரம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பத்மா சூரன். கூத்து : பத்மா சூர வதம்
6. மனோன்மணி
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொம்மி, கூத்து : மதுரை வீரன்
7. முத்துலட்சுமி
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்
8. செ.சரோஜா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
9. கருப்பண்ணன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், கட்ட பொம்ம லாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
10. ராமநாதன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்
11. சித்தன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
12. சின்னக்கண்ணு
நால்கால்பாலம்
கலைச்சேவை : 45 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொன்னுருவி கூத்து : கர்ணமோட்சம்
13. வீராசாமி
எலிமேடு
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன், கூத்து : ஆரவல்லி சண்டை
14. மெய்வேல்
சீரகாபாடி
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன் கூத்து : பதினெட்டாம் நாள் யுத்தம்
15. பெரியராஜ்
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : கிருஷ்ணன், கூத்து : அல்லி அர்ஜூனா
16. சின்ராசு
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : யசோதரை, கூத்து : கிருஷ்ணன் பிறப்பு
17. பச்சமுத்து
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள்,முகவீணைக்கலைஞர்- தெருக்கூத்து
18. குஞ்சு கண்ணு
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், முகவீணைக் கலைஞர் - தெருக்கூத்து
19. செல்லமுத்து
மோர்பாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் :அல்லி முத்து கூத்து. : ஆரவல்லி பந்தயம்
20. ஹரிதாஸ்
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், மிருதங்க கலைஞர்- தெருக்கூத்து
21. தங¢கவேல்
எலிமேடு
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : அர்ச்சுனன் தேவப்பட்டம்
22. சுப்பன்
நகுலூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் - தெருக்கூத்து
23. சுப்ரமணி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அபிமன்யு கூத்து : ஆரவல்லி அல்லி முத்து பந்தயம்
24. ஐயந்துரை
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : தருமர், கூத்து : படுகளம்
25. சத்தியவதி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சுபத்திரை : பவளக்கொடி
26. செல்வம்
கரட்டூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : உத்திர குமாரன் கூத்து : விலாடபருவம்
27. மாதேஸ்
எலிமேடு
கலைச்சேவை : 30 ஆண்டுகள், கட்டியங்காரன் தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம்
28. கணேசன்
கொம்பாடிப்பட்டி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : மண்டோதரி கூத்து : சூர்ப்பனகை கர்வபங்கம்
29. லதா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் தெருக்கூத்து
30. செட்டி
சேடப்பட்டி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : குறத்தி. கூத்து : குறவஞ்சி
31. சேட்டு
நல்லூர்
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : துரியோதனன் கூத்து : மகுடவர்த்தகன் அரவான் சண்டை
32. ஆறுமுகம்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சனீசுவரன், கூத்து : சனிவிரதம்
33. மணி
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பார்வதி கூத்து : துருவாசர் கர்வபங்கம்
34. அங்கமுத்து
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அலர்மேல் மங்கை, கூத்து : வெங்கடேசப் பெருமாள் கல்யாணம்
35. வேம்பன்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : பவளக்கொடி
36. துரையன்
கன்னந்தேரி
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பின்னணி இசை- தெருக்கூத்து

கலைச்சுடர்


1. காளிதாஸ்
2. ராசேந்திரன்
3. பழனிசாமி
4. ராஜமாணிக்கம்
5. ராஜேஷ்
6. சென்னகிருஷ்ணன்
7. சங்கர்
8. கலைஞன்
9. சகத்தி


பங்கு பெறுவோர்
ஷாஜகான்,உதயசங்கர்,அனுராதா,கு.ரா,தபசி,கே.வி.ஆர்,சந்தியூர் கோவிந்தன்,பாலமுருகன்,செல்வப்பெருமாள்,க.சீ.சிவக்குமார்,வசு மித்ர,பேய்க்காமன்,ஞா .கோபி,சௌந்தரசுகன்,இசை, இளங்கோகிருஷ்ணன்,ந.பெரியசாமி,ஜீவன் பென்னி,கலை இலக்கியா, ச.முத்துவேல்,சூர்யநிலா, பொன்.குமார், சக்தி அருளானந்தம்,அதிரதன்,முபாரக், மண்குதிரை,ச்விசயலட்சுமி,பாரதி நிவேதன்,இனிது இனிது காத்திகேயன்,எழில் வரதன், ரத்திகா, ரந்தீர்,இளஞ்சேரல்,சொ.பிரபாகர், யாத்ரா,சேரல்,நந்தா,தூரன்குணா,நக்கீரன்,ஆதிரன்,போப்பு,விவேகானந்தன்,தமிழ்நதி, ஞானதிரவியம்
மற்றும் எங்கள் பெருமைக்குரிய வாத்தியார்கள்: மாயவன்,குருநாதன்,செல்லப்பன்,ஜெயா,கனகராஜன்,அம்மாபேட்டை கணேசன்,கோவிந்தசாமி,எலிமேடு வடிவேல்,ரெட்டியார்(எ)ராசேந்திரன்,கொம்பாடிப்பட்டி ராஜு,கூலிப்பட்டி சுப்ரமணி,மாணிக்கம்பட்டி கணேசன்,பெரிய மாது,சித்தன்,வீரப்பன்,லட்சுமி அம்மாள் செட்டிப்பட்டி சின்னவர்.
-----------------------------------------------
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,
ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,
611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

Saturday, December 12, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்
ilango
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
காலச்சுவடு வெளியீடான காயசண்டிகை என்கிற கவிதைத்தொகுப்பின் மூலம் அறிமுகமாகியிருக்கும் கவிஞர் இளங்கோகிருஷ்ணன் , இன்றைய இளம் கவிஞர்களுள் மிகவும் குறிப்பிடத்தகுந்த சிறந்த கவிஞர். இவர் தம் கவிதைகளைப் புனைவிலேற்றி, படிமமாக்கி எழுதுகிறார். புனைவு என்பது ஒரு படைப்புக்கு எந்தளவுக்கு இயல்பாகப் பொருந்தமுடியுமோ அந்தளவுக்கு எழுதுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், கூடுதல் சுவையையும் அளிக்கிறது.அந்த வகையில் இளங்கோகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் காணப்படும் புனைவு இயல்பானதாகவும், பொருத்தமாகவும் , பன்முகத்தமைக்கு இட்டுச்செல்லும் வகையிலும் அமைந்துள்ளது.நேரடியான உரை நடைத்தன்மை கொண்ட எளிய கவிதைகளும் எழுதுகிறார்.தனித்த நுண்கதைகளைப் போலிருக்கும் இவரின் கவிதைகள் வாசித்து உள்வாங்கியதும் பன்முகத்தன்மையோடு பல்கிப்பெருகக்கூடியதாக உள்ளது. வாழ்தலின் சலிப்பை,துயரை, இயலாமைகளை எழுதுகிறார்.சுய விருப்பங்களை தொலைத்த நிர்ப்பந்த வாழ்வில் ,ஆட்டத்தின் விதிகளை அறியாத சூதாட்டக்காய்களைப் போன்ற நிலையை எழுதுகிறார்.அவலங்களுக்கு எதிராக பிரச்சார தொனியில் எழுதிக்கொண்டிராமல் , சீறிப்பாயாமல், நைச்சியமாக கேலி பண்ணும் புத்திசாலித்தனம் கொண்டவை இவர் கவிதைகள்.எதிர்த்தன்மையைக் கொண்டதுபோல் எழுதப்படும் இவர்தம் கவிதைகளில் கவிஞரின் குரல் கவிதைக்குள்ளாக ஒளிந்துகொண்டிருப்பது. காலங்காலமாக நிலவிவரும் சமூக அவலம் முதல் இன்றைய சமூக,அரசியல் அவலங்கள், நிகழ்வுகள் வரைக்கும் மறைமுகமாகக் குறிப்புணர்த்துகிறது இவர்தம் சில கவிதைகள்.

ஒரு தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் நன்றாக அமைந்து இருந்தாலே போதும், அத்தொகுப்பு வெற்றிபெற்றதாக எண்ணலாம் என்றொரு கருத்து உண்டு. ஆனால், இவரின் தொகுப்பான காயசண்டிகையில் நம்மால் ஐந்தாறு கவிதைகளைக்கூட ஒதுக்கித்தள்ளிவிட முடியாத அளவுக்கு அத்தனைக் கவிதைகளும் சிறப்பானது.முதல்தொகுப்பான காயசண்டிகையிலேயே முதிர்ந்த மொழிவளமும், கச்சிதமான வடிவமைப்பும், புதிய உத்திகளும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். உரை நடை வடிலும், பத்தி வடிவிலும் சில கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், சிறுகதைகள் மற்றும் நுண்கதைகள் , மொழிபெயர்ப்புகள் ஆகியனவும் எழுதிவருகிறார்

காயசண்டிகை தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மதிப்புரை:

‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல். உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’

இயற்பெயர் பா.இளங்கோவன். வரி ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.கோவையைச் சார்ந்தவர். இவரின் வலைப்பூ.

காயசண்டிகத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்


இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது

ஊழியம் கம்பெனி (பி) லிமிடெட்


நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்

நன்றி - தடாகம்
Thadagam_Logo_Eng

Thursday, November 26, 2009

தமிழ்ஸ்டுடியோ.விற்கு நன்றி

”நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த பதிவுகள் தமிழில் சற்றுக் குறைவுதான். இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் பல்வேறு தரப்பட்ட ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அது போன்ற நல்ல முயற்சிகளை அணைவரும் தொடங்க வேண்டும். தூறல் கவிதை எனும் இவரது வலைப்பூவின் பெயரே கவிதை நயமானது. மேலும் சிறுகதைகள், புத்தக அறிமுகம், கவிதைகள் என மிக சிறந்த கட்டுரைகளும், படைப்புகளும் இந்த வலைப்பக்கத்தில் உலா வருகின்றன. அதிலும் மிக முக்கியமாக ஸ்ரீ நாராயணகுரு பற்றிய புத்தக அறிமுகத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும். ஒரு சிலப் பதிவுகளை தவிர்த்து பார்த்தால் தமிழின் சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இங்கு பதிவிடப்பட்டுள்ள கட்டுரை குறித்த உங்கள் ஐயங்களை, கலந்துரையாடல்களை அவரது வலைப்பூவிலேயே தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம். இது நல்ல கட்டுரைகளை கொண்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் பகுதி மட்டுமே.”





Tuesday, November 24, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் இசை
isai
கவிஞர் இசை
வெவ்வேறு காலக்கட்டங்களில், சூழலில்,அனுபவங்களில், மனோ நிலைகளில் ஒரு கவிஞன் தன் கவிதைகளை எழுதுகிறான்.அவற்றை ஒரு தொகுப்பாகப் படிக்கமுடிகிறபோது, தொகுப்புகளின் அடிநாதமாய், ஒரு மையப்புள்ளி இருந்துவிடுகிறது. அந்த மையத்தை, ஒற்றுமையை ஒற்றைச்சொல்லிலோ அல்லது ஓரிரு வரிகளிலோ அடையாளப்படுத்திவிடமுடிகிறது. அந்த மையமே கவிஞனின் தனித்தன்மையாகிறது.சிறப்புத்தன்மையை அளிக்கிறது.அந்த வகையில் கவிஞர் இசையின் கவிதைகளின் அடிநாதமென இயலாமைகளைப் பற்றிய பரிகாசம் கலந்த குரல் எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
 
லௌகீக உலகின் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வை வாழவிரும்புபவர்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.ஒன்று, விதிக்கப்பட்ட வாழ்வை மாற்ற முயல்வது. மற்றொன்று அதனோடு பணிந்து ஒத்துப்போய்விடுவது(.மடிந்துபோகுதல் வாழவிரும்புபவர்களுக்கான தெரிவல்ல)..இதையே கவிஞர் இசையின் கவிதை வரிகளில் சொல்லலாமெனில்
 
”ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம்பொருந்திய ஒற்றைக்கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப்போல”



இருந்துவிடுகிற வாழ்வில்

”இச்சாக்கடையில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே”



எனச் சமரசம் செய்துகொள்ளவேண்டியதன் துயரை, அவலத்தை,இயலா நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பல்வேறு இயலாமைகளைப் பட்டியலிடுவதாக அமைந்துள்ள இவரின் கவிதைகள் எளிமையையும், இயல்பான வசீகரம் கொண்ட மொழியையும் கொண்டுள்ளது.துயரங்களையும் பரிகாசம் கலந்து எழுதுவது இவருடையத் தனிச்சிறப்பு.

”இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன”
என்கிற வரிகள் ,இவரின் உறுமீன்களற்ற நதி தொகுப்பில் அமைந்துள்ள செறிவான, தெளிவான மதிப்புரை.

மேலும் கவிஞர் இசையின் பார்வையிலேயே அமைந்துள்ள பின்வரும் சுயமதிப்புரையை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும்.
 
‘என் கவிதைகள் துயரத்தையே அதிகம் பேசுகின்றன. ஆனால் துயரத்தை மட்டும் பேசு என்று நான் அதற்கு கட்டளையிடுவதில்லை. அப்படி கட்டளையிடவும் முடியாது. ஆனாலும் அவை துயரத்தையே தன் பேச்சாக தெரிவு செய்கின்றன. “நான் எவ்வளவு பெரிய சுக போகி . . . , களியாட்டுக்காரன் . . . , அறை அதிரச் சிரிப்பவன் . . . , எத்தனை காதல்களை கொள்பவன் . . . , எத்தனை காதல்களை கொடுப்பவன் . . . இப்படி அழுது வடியாதே” என்று எத்தனையோ முறை நான் கெஞ்சியாகிவிட்டது. ஆனாலும் “துயரத்தின் கைமலராக” இருப்பதையே அவை விரும்புகின்றன. இதை யோசிக்கையில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் எழுத்தில் எதைச் சொல்ல வேண்டும் என்பதில் அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தேர்வு இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. அல்லது ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவன் படைப்பு மனத்தை தூண்டிவிடுவது சில குறிப்பிட்ட விஷயங்களாக அமைந்துவிடுகின்றன என்றும் கருதலாம். என் கவிதையில் தொழில்படும் அங்கத உணர்வே இந்த அழுகையின் அலுப்பிலிருந்து வாசகனை விடுவித்து ஒருவித புத்துணர்வையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கிறது என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.”


”என் கவிதைகளில் சொற் சிக்கனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் இசைத்தன்மை கூடி வர வேண்டும் என்பதையே நான் விரும்புவதாக சந்தேகிக்கிறேன். இசையின் பெரும் துடிப்பு எதுவும் என் கவிதைகளில் இல்லாத போதும், என்னளவில் ஒரு இசை அதில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இதற்காக கவிதைக்கு தேவையற்றது என்று சொல்லப்படுகின்ற சில வாக்கியங்களையும் நான் கவிதையில் அனுமதிப்பதாக நினைக்கிறேன். இந்த வாக்கியங்கள் எனக்கான பிரத்தியேக கவிதை மொழி ஒன்றை உருவாக்குவதிலும் துணை செய்கின்றன என்று கருதுகிறேன்.”


புத்தாயிரம் ஆண்டிற்குப்பிறகு எழுதத்தொடங்கியுள்ள கவிஞர்களில் இசை-யின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.இவரின் இயற்பெயர் ஆ.சத்தியமூர்த்தி.கோவை மாவட்டம் இருகூரில் வசிக்கிறார்.அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றுகிறார்.இவரின் கவிதைத்தொகுப்புகள்,

1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(2002)
2.உறுமீன்களற்ற நதி(2007),காலச்சுவடு பதிப்பகம்.

இசைக்கருக்கல் (டங்கு டிங்கு டு) என்கிற வலைப்பூ எழுதுகிறார்.

உறுமீன்களற்ற நதியிலிருந்து சில கவிதைகள்
அழகான சொற்றொடர்


குரலுயர்த்த இயலாதது உனது நா
தழுதழுப்பதொன்றே அதன் இயல்பு
நீ காண்டீபம் உயர்த்தும்
ஒவ்வொரு முறையும்
யாருன் காலில் விழுந்து
மன்றாடுவது
மனைவியா குழந்தையா
பற்கடிப்பும் முணுமுணுப்புமே
நம் ஆகச்சிறந்த தீரச் செயல்கள்
என்றாகிவிட்டது
அழுவதற்கென்றே செய்யப்பட்ட
முகங்களைக் கொண்டு
அழுதுகொண்டிருக்கிறோம்
அழுதோம்
அழுவோம்
“கண்ணீர்த் துளிகள்
சாம்ராஜ்யங்களையே சரித்துவிடும்”
இது ஒரு அழகான சொற்றொடர் நண்பா.

தற்கொலைக்கு தயாராகுபவன்


தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது .
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுன்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

ஒரு கூரான கத்திக்கு முன்னால்


ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
நீங்கள் அற நெறிகளைப் பிரசங்கிக்கலாகாது
ஏனெனில்
உலகின் முதல் கத்தி
உண்மையைக் கிழிப்பதற்கென்றே வடிவு
செய்யப்பட்டது
ஒரு கூரான கத்திக்கு என்றுமே
தோல்வி பயம் தோன்றுவதில்லையாதலால்
சமரசத்திட்டங்கள் எதையும்
நீங்கள் முன்வைக்க இயலாது
ஒரு கூரான கத்திக்கு முன் தோன்ற
கடவுளர்க்கும் குலை நடுக்கம் உண்டென்கிறபடியால்
உங்கள் அபயக்குரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களுக்கு நன்றாக நினைவிருக்கவேண்டும்
நீங்கள் சே குவேரா அல்ல
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
மன்னித்தருள வேண்டி
கத்தியின் கால்களைக் கட்டிக்கொண்டு
மன்றாடுவது அல்லது
அதன் கணக்கில் மேலும்
ஒரு வெற்றிப்புள்ளியைக் கூட்டி
துடிதுடித்தடங்குவது.

சகலமும்


சகலமும் கலைந்து சரிய,
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக்கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பிதாவே

ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கு இடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘' நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''
பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.
நன்றி – தடாகம்
Thadagam_Logo_Eng

Wednesday, November 11, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் முகுந்த் நாகராஜன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

கவிஞர் முகுந்த் நாகராஜன்

நவீன கவிதைகள் என்றாலே புரியாமல் எழுதுவது என்கிற ஆரம்பக்கட்ட வாசிப்புப் புரிதலை தகர்த்தெறியும் கவிஞர்களுள் முகுந்த் நாகராஜன் மிக முக்கியமானவர் .இன்றைய தலைமுறைக் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர். புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் யாராவது ஒருவர் பெரும்பாலும், பக்கத்திற்குப் பக்கம் புன்முறுவல் புரிகிறாரெனில் அவர் படிப்பது முகுந்த் நாகராஜனின் கவிதைத்தொகுப்பாகவும் இருக்கலாம்.குட்டிக்குட்டிக் கதைகளைப் போலிருக்கும் இவர் கவிதைகள் , கவிதைக்கான பிரத்யேகமான மொழி ஏதும் இல்லாமல் எளிய பேச்சு மொழியிலேயே இருப்பதால் சுவாரசியத்தோடு வாசகரை இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை..எளிய மொழியில் கூறப்பட்ட நிகழ்வுகள்/ காட்சிகள் என்பதால் மனதில் நிலைக்கவும் நினைவு கூரவும் மிக எளிதாகிவிடுகிறது.இதனால் இவரின் கவிதைகள் பகிர்தலுக்கு உகந்ததாகவும், பரவலாகப் பேசப்படுவதற்கும் ஏதுவாயிருக்கிறது.அவ்வளவாகப் பதிவாகாத குழந்தைகளின் உலகை நிறையவும், நிறைவாகவும் பதிவு செய்பவர் முகுந்த். உன் –உனக்கு, என் – எனக்கு, என்பதுபோல் நான் – எனக்கு என்று சொல்லாமல் குழந்தைகள் ‘நானுக்கு’ என்று சொல்வதைப் பலரும் கண்டிருக்கமுடியும். குழந்தைகளின் பார்வை புதிய பார்வை. எவ்வித முன்முடிவுகளும், கற்பிதங்களும் அற்ற பார்வை. குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை மறந்து புன்முறுவல் செய்துகொண்டிருப்போம். அதுபோன்ற செய்கைகளை , நிகழ்வுகளை அப்படியே எழுத்துக்குக் கடத்தி, கூடவே தம்முடைய ரசனையான, படைப்பூக்கம் மிக்க நவீன சிந்தனைகளோடும், கூறுமுறையோடும் கலந்து தருவதால் முகுந்தின் கவிதைகள் தரமானவையாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.


இவர் கவிதைகளில் திரும்பத் திரும்ப வருவது குழந்தைகள், பால்ய நினைவுகள், எளிய மனிதர்கள், குடும்பம், வீடு, தனிமை, பிரிவு, கிருஷ்ணன், நீலம், ரயில் பயணம் இன்ன பிற. பால்யத்தை தொலைத்துவிட்ட தவிப்பும், அதை ஈடு செய்துகொள்ளும் விதமாக தன் பால்ய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்துகொள்வதாகவும் இருக்கிறது நிறைய கவிதைகள். மரபும், பாரம்பரியமுமான வாழ்விலிருந்து அன்னியப்பட்டு நமது தேவைகளுக்கேற்ப சடங்குகளை, வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டும், சுருக்கிக்கொண்டும், தொலைத்துக்கொண்டும் இருக்கும் நிலை குறித்த துயர் கொண்ட கவிதைகள் இவருடையது.பழையப் பெட்டியை, பரணை, அலமாரியைச் சுத்தம் செய்வதுபோல் இவர் தன் பால்யத்தை நினைவுகூர்ந்து எழுதுகிறார். இவரின் கவிதைகள் அனைத்தையும் ஓரளவுப் படித்துவிடும் ஒருவருக்கு, முகுந்த் பற்றிய வாழ்க்கைச்சித்திரம் நன்றாகவே பிடிபட்டுவிடும். அந்தளவுக்கு தன் வாழ்வனுபவங்களிலிருந்தும், அன்றாடங்களிலிருந்தும் எடுத்து எழுதப்படும் அசலானவை இவர் கவிதைகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தே நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதிலிருந்து இவரின் அவதானிப்புத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை.வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தமான, இயந்திர வாழ்விலிருந்து விலக்கு அளிக்கும் விடுறை நாளை, கொண்டாடும் , அதற்கு ஏங்கும் மனப்பாங்கு சில கவிதைளில் தென்படுகிறது.
பேப்பர் போடும் பையன், சித்தாள், சீரியல் செட் போடுபவன், சுரங்க நடைபாதையில் பொம்மை விற்பவன், பூ விற்வள்,ரயிலில் காலண்டர் விற்கும் கண்பார்வையற்றவன் ஆகிய எளிய மனிதர்களின் மீதான அக்கறையோடு கவனிக்கப்பட்ட, அவர்களின் நிலைக்காக கழிவிரக்கம் கொள்ளும் இரங்கிய உள்ளம் வாசகரையும் துயர்கொள்ளச் செய்பவை. உறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை.பெண்களின் திறமை வீணடிக்கப்பட்டு சமையற்கட்டில் முடிந்துபோகும் பரிதாபமான, யதார்த்தமான சூழல்களையும் சில கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
இணையம் மூலம் எழுதி, பிறகு தனிப்பட்ட முறையில் தொகுப்பை வெளியிட்டு பரவலான கவனம் பெற்ற இவரின் தன்னம்பிக்கை குறிப்பிடத்தகுந்தது.


இவரின் கவிதைத்தொகுப்புகளாவன,


1. அகி(டிசம்பர் 2003)
2. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது( டிசம்பர் 2006)
3. கிருஷ்ணன் நிழல்


வீணாப்போனவன் என்கிற பெயரில் வலைப்பூவும் எழுதிவருகிறார்.இவரின் சில படைப்புகள் கிழே .,

சித்தாள் வாழ்ந்த இடம்


முப்பது கம்பெனிகளும்
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தைத்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.


கிணறு இல்லாத ஊர்


கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.
நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.
கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி?

மழை அளவு


’கன மழை’ என்றார்கள் டிவியில்.
கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் ‘ நல்ல மழை’ என்றும்
இளைஞர்கள் ‘செமை மழை’ என்றும்
சொல்லிகொண்டார்கள்
‘எவ்ளோ தண்ணீ’ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை.


மனப்பாட மீன்குட்டி


குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.


சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.


ஈரம் போக


கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

Sunday, November 1, 2009

சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

கண்மணி குணசேகரன்

'இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு,தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களைக் கண்டறிய முடியவில்லை.
(கவிஞர் இசையின் கவிதையிலிருந்து)


இவ்வுலகில் இன்னும் அறியப்படாத துயரங்கள் நிறையவே இருக்கின்றன.இலக்கிய வாசிப்பு என்பது நடுத்தர மக்களிடையேதான் அதிகம் என்று கணிக்கமுடிகிறது. நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைப் பற்றிய வாழ்வியல் பதிவுகளே இதுவரை பதிவாகிக்கொண்டு வந்துள்ளது. ஏனெனில், எழுதியவர்களின் பின்புலம் அவ்வாறானதாய் இருந்திருக்கிறது.கல்வி வாய்ப்புகள் ஓரளவு பெருகியுள்ள தற்போதைய சூழலில், இலக்கியம் என்பதும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டு செழுமையாகத் திகழ்கிறது.ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களும் ஓரளவு கல்வி கற்று எழுதத்துவங்கியுள்ளனர்.இவர்களின் எழுத்து அனுபவப்பூர்வமானதாகவும்,புதிய வீச்சோடும் திகழ்கிறது.கண்மணி குணசேகரன் என்கிற படைப்பாளி இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.


இவரின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள்.கிராமத்து விவசாயக்கூலிகள், பன்றி மேய்ப்பவர், சாவு மேளம் அடிப்போர், நலிந்து வரும் கூத்துக்கலைஞர்கள் போன்றவர்களாவர். இந்த மனிதர்களின் அகவுலகம் பற்றி,இவர்களின் உலகம் சொற்பமானதாயிருப்பதை அறியச் செய்யும் எழுத்து.இவர் கதைகள் பேசுவது இம்மாந்தர்களின் வாழ்வு இன்னல்களை, சிக்கல்களை.ஒரு செய்திக்கும், இலக்கியப் படைப்புக்கும் இருக்கும் வேறுபாடு என்னவாக இருக்க முடியும்? அந்த வேறுபாட்டை இவர் தன் எழுத்தில் மிகவும் இயல்பாகத் தக்கவைக்கிறார்.ஒரு முதியவருக்கு இருக்கும் அனுபவத்தோடு இவரின் படைப்புகளைப் பார்க்கும்போது இவரின் அவதானிப்புத் திறன் ஆச்சரியமளிக்கும்.ஒரு கதையில் கதைசொல்லியின் குரல், உணர்வு ஆகியவற்றோடு நின்றுவிடாமல் அக் கதையில் வரும் எல்லாக் கதாபத்திரங்களின் உணர்வுகளையும்,சூழல்களையும்,அவர்களின் பார்வையையும் பதிவு செய்திருப்பார்.பெண்களின் மனவுணர்வுகளையும், அவர்களின் அந்தரங்கச் சிக்கல்களையும்கூட மிகத் துல்லியமாய் எழுதியிருக்கிறார்.இவரின் எழுத்துக்களம் கிராமங்கள். நடு நாடு என்று வர்ணிக்கப்படும் கடலூர்,விருத்தாச்சலம் சுற்றுவட்டார செம்புலக் கிராமங்கள். கிராம, வேளாண் வாழ்வின் நுண்தகவல்கள் அனுபவத்தின் விளைவால் இவருடைய ஆக்கங்களில் விரவிக்கிடக்கும். நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. நடு நாட்டு வட்டார மொழியிலும், யதார்த்தவாதத்தையும் எழுதுபவர்.சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.


கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.


நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.செம்புலத்தின்மீது வலிந்து படியும் (நெய்வேலியின்) சாம்பல் கரியைப் பற்றிய கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.


இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான,இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.


இவரின் படைப்புகளாவன;


1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு - சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் - சிறுகதைகள்
7.அஞ்சலை - புதினம்
8.கோரை - புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி


மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.கவிதைகளைவிட உரை நடையே இவரின் ஆகச் சிறந்த படைப்புக்களமாக இருக்கிறது.


அவரின் சில குறுங்கவிதைகள்


பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.
*
பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.
*
உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.
*
ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்
*
கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
*
கருவறை
சேதியறியா
பால் தாரை
சுரக்கிறது
இறந்தே பிறந்த
குழந்தைக்கும்
*
வாசலுக்கே வந்து
கதவைத் தட்டுகின்றன
கூடை அரும்புகள்.
கொடுத்துவைத்தவைதான்
நகரத்துத் தேனீக்கள்
*
கட்டு
காம்புகளுக்குத்தான்
இதழ்களுக்கல்ல
இடமாற்றத்திலும்
அழகாய்த்தான் பூத்தன
சரக்கூந்தல்
அரும்புகள்

நன்றி - தடாகம்
*

Thadagam_Logo_Eng

Sunday, October 25, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் தென்றல்

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் தென்றல்

கவிஞர் தென்றல்

OLYMPUS DIGITAL CAMERA
நவீன கவிதைகள் என்பதில் கூறுமுறை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சொல்லப்படும் முறையும் நவீனத்தன்மையுடனும்,புதிதானதாகவுமிருப்பது.கவிஞர் தென்றலின் கவிதைகள் வித்தியாசமான, நூதனமான கோணங்களில் அவதானிக்கப்பட்டவைகளாக இருப்பது தனிச்சிறப்பு.வழக்கங்களிலிருந்து விடுபட்டு,புதியதொரு பார்வையுடன் பார்க்கப்பட்டிருக்கிறது.ஒன்றினை விளக்க உவமை பயன்படுத்தப்பட்டு, அது எதை விளக்கமுனைகிறதோ அதையும் சொல்வது உவமை, உவமேயம் என்று அறியப்படுகிறது. உவமையாக சொல்லப்படுவது மட்டுமே தனித்து நின்றும், போலவே , அது உணர்த்துவது வேறொன்றும்,ஒன்றுக்கும் மேற்பட்டதுமானதுமான தன்மை கொண்டதை படிமம் என்கிறோம். கவிஞர் தென்றலின் கவிதைகள் நிறையவே படிமக்கவிதைகளாக அமைந்திருக்கிறது.


பறத்தல் சுதந்திரத்தின் குறியீடாகப்பயன்படுகிறது.தென்றலின் சில கவிதைகளும் சுதந்திரத்தின் விழைவைக் கூறுகிறது.தலையீடுகளும், நிர்ப்பந்தங்களையும் வெறுக்கிறது.அதுபோலவே, மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்த வருத்தத்தை சில கவிதைகளில் காணலாம்.அக் கவிதைகள் தன்னுணர்வாக, விரக்தியையும், சலிப்பையும், ஏமாற்றத்தையுமே கொண்டிருக்கின்றன.பெண்ணியம் சார்ந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.
ஒரு விளையாட்டுச் சிறுமியின் மனப்பாங்கைத் தொலைத்துவிடாத இளம்பெண்ணின் அனுபவங்களாகவே இவர் கவிதைகளில் பூனை, பொன் வண்டு, ரோஜாத்தொட்டி, கிளி, தும்பி ஆகியவை மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நீல இறகு என்கிற இவரின் முதல்கவிதைத்தொகுப்பு, உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.சிறியதும், பெரியதுமான 89 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு நல்ல கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.சிந்தனைகளில் இருக்கும் வீச்சு கவிதைகளின் கட்டமைப்பில் கூடிவரும்போது இன்னும் நல்ல கவிதைகளாகப்படும்.செறிவும், கவிமொழியும் அடுத்தத் தொகுப்புகளில் இவரிடம் நிச்சயம் முன்னேற்றம் கண்டிருக்கலாம்.

புதுச்சேரியைச் சார்ந்தவரான தென்றல் சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார்.இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை இவருக்கு கவித்தூவி விருதுகொடுத்துச் சிறப்பித்துள்ளது.


ஒற்றையடிப்பாதை

ஒற்றையடிப்பாதை
அதிகாரம் வாய்ந்ததாய்
திரும்பச் சொல்லும் இடத்திலும்
வளைந்துபோகும் இடத்திலும்
திரும்பவும்
வளையவும் வைக்கிறது.
முதுகில்
துப்பாக்கி முனை பதித்து
முன் நடத்தும்
கொள்ளைக்காரன்போல
நன்றாகத் தெரியும் அதற்கு
அவ்வழியே
பயணிப்போர் இல்லையென்றால்
புற்களால் தின்னப்பட்டு
மடிந்துபோகுமென்று
இருந்தபோதிலும் வெட்கமின்றி
ஓயாமல்
மிரட்டிக்கொண்டேதானிருக்கிறது
அவ்வழியே
போவோரையும் வருவோரையும்

பஞ்சின் கனவு


இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

என் ஒரே கேள்வி


பெரிதாய் ஒன்றும் நான் கேட்கவில்லை
அன்று
நீங்கள் நம்பமாட்டீர்கள்
அப்போது யாவரும்
ஒருமாதிரியாய் என்னை
புரிகிறதா
அதைவிடுங்கள்
நீங்கள் இருக்கின்றீர்கள்
இதுபோதும்
இப்பொழுது
இங்கு
நான் கேட்கிறேன்
பிய்ந்து கிடக்கும் மீன் தலைக்கு
நான் யார்?
ஏன் வியர்க்கிறது உங்களுக்கு?

கேள்வி

யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது


நன்றி-தடாகம்
Thadagam_Logo_Eng

Wednesday, October 14, 2009

சாளரத்தில் தெரியும் வானம்#1-கவிஞர் மனுஷ்யபுத்திரன்

என் பார்வையில் படைப்பாளிகள் : கவிஞர் மனுஷ்யபுத்திரன்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

‘உங்கள்(மனுஷ்யபுத்திரன்) கவிதைகளின் வன்முறை மிக்க கசப்பு என்னை எப்போதுமே தாக்குவதில்லை.அதை தாண்டி அதிலுள்ள மென்மையான ஏக்கத்தினாலேயே நான் மனம் தீண்டப் பெறுவேன். அந்த வன்முறை தனக்குத்தானே செய்துகொள்ளும் பாவனையே என்றும் எண்ணிக்கொள்வேன்”
-ஜெயமோகன்

ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா ஆகியோர்களை முன்னோடியாகக் கொண்டு எழுதுவதாகக் கூறினாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்தன்மையோடு எழுதுபவர்.இன்றைய இளம் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளவர்.14 வயதில் கவிதை எழுதத் துவங்கி 16 வயதில் தனது முதல்கவிதைத் தொகுப்பு”மனுஷ்யபுத்திரன் கவிதைகள்” கொண்டுவந்தவர். இருந்தாலும் “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற இவரின் இரண்டாவது தொகுப்பையே, முதலாவதாகக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்.இவைகளைத் தவிர ‘இடமும் இருப்பும்”, 'நீராலானது', 'மணலின் கதை', 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' ஆகிய கவிதைத்தொகுப்புகளையும் ‘எப்போதும் வாழும் கோடை', ‘காத்திருந்த வேளையில்' ஆகிய இரண்டு கட்டுரைத்தொகுப்புகளையும் கொண்டுவந்துள்ளார்.எப்போதும் வாழும் கோடை என்னும் கட்டுரை நூல் நவீன கவிதைகள் பற்றிய கருத்துகள்,விமர்சனக் கட்டுரைகள் கொண்ட நூல்.கவிதைகளைப்போலவே இவரின் உரைநடைக்கு சிறந்ததொரு சான்றாக இக் கட்டுரைத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.மேலும் ‘உயிர்மை' மாத இதழ் மற்றும் உயிரோசை எனும் இணைய வார இதழின் ஆசிரியர்.உயிர்மை பதிப்பகமும் நடத்திவருகிறார்.

2002 ஆம் ஆண்டு இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்', 2003 ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய'இலக்கியச் சிற்பி',2004 ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தனி நபர் படைப்பாற்றலுக்கான'விருது ஆகிய விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

பனிமலையின் நதிபோல தெளிவானதும், துல்லியமானதும் ,சிலிர்ப்பும் கொண்டவை இவரது கவிதைகள்.'உரையாடல் தன்மை கொண்ட,அதே சமயம் செறிவூட்டப்பட்ட சொற்களையே கவிதைக்காக என் மனம் சார்ந்திருக்கிறது' என்கிற இவரின் கவிதைகள் மிகவும் உரையாடல் தன்மை கொண்டதாய் இருக்கின்றன.'ஒரு கவித்துவமான சொல்கூட இல்லாமல் கவிதையின் உக்கிரத்தை ஏற்றிய வரிகளை தமிழில் எழுதவேண்டும்'என்று கூறும் இவரின் கவிதைகள் துல்லியமான, எளிமையான சொற்களினால் ஆனது.வார்த்தைகளாக நீட்டிக்கப்படவேண்டிய வரிகளை ஒரு சொல், அல்லது ஓரிரு சொற்களில் வெளிப்படுத்திவிடும் செறிவும், சொல்லின் ருசியும் இவர் கவிதைகளிலும், உரை நடையிலும் உண்டு. ஆனாலும் அவை எளிமையான சொற்களாய் இருப்பது ஆச்சரியமூட்டுவது.வாசகனை சிரமப்படுத்தாமல் இட்டுச்செல்லும் கவிதை தொனியை கவிதையின் இயல்பான தன்மையாகவே படைத்திருக்கிறார்.பத்திகளாக எழுதுவது எளிய வாசகனுக்கும் உகந்ததும் வரவேற்கத்தகுந்ததுமாகும்.மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும், பிரிவுகளையும் உளவியல் ரீதியில் அணுகுகிறது இவர் கவிதைகள்.அதீத அன்பும் கூட ஒரு வன்முறையே என நேர்ப்பேச்சில் குறிப்பிட்டவர், இது பற்றி எத்தனை எழுதினாலும் எழுதித்தீரவில்லை என்று கூறுகிறார்.கவிதைகளைப்போலவே கவிதைகளுக்கான தலைப்புகளும் அலாதியானவை.தனித்துவமானவை.ஒரு உட்பொருளை எழுதுகையில் அதற்கு மிக நெருக்கமானதும், மிக யாதார்த்தமானதும், துல்லியதுமானவற்றை பட்டியலிடும் தன்மை இவர் கவிதைகளில் விரவிக்கிடக்கும்.ஒரு சிறு சூழலை,சம்பவத்தை முன்வைக்கும் கவிதைகள் பல கோணங்களில், பல தளங்களில் தன்னை அவிழ்த்துக்கொள்ளும் மர்மங்களும், பன்முகத்திறனும் கொண்டவை.ஆற்றமுடியாத துக்கத்தையே ஏற்படுத்தும் இவர் கவிதைகள் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தவல்லவை. அம்மா இல்லாத ரம்ஜான், அரசி போன்ற நெடுங்கவிதைகள் நிறைய எழுதியுள்ளார்.

காத்திருத்தலின்

காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்
பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே
இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதும் இல்லை

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொணடையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

அமைதி

நீரில்
இரவெல்லாம்
ஓசையற்று
உடைந்துகொண்டிருக்கிறது
நிலவு
ஒரு
விசும்பலற்று
அழுகின்றன
மீன்கள்
எந்த உராய்வுமற்றுச்
சுழல்கின்றன
நீர் வளையங்கள்
ஏதோ ஒரு மரத்தின்
பெருமூச்சுகளிலிருந்து நீங்கி
நெடுந்தொலைவாய்
பயணம் செய்கிறது ஓரிலை
நீரின்
அத்தனை அமைதிகளும் கூடி
யாருமற்ற கரைநோக்கி வந்துகொண்டிருக்கிறது
அக் குழந்தையின் உடல்

அழுகை வராமலில்லை

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்களின் முன்னால்
அழக்கூடாது

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
ஒருமீன்
துள்ளுகிறது
சும்மா
துள்ளுகிறது
யாரும் பதட்டமடையத்
தேவையில்லை
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

Sunday, October 11, 2009

என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி

சாளரத்தில் தெரியும் வானம் - முன்னுரை - ச.முத்துவேல்

      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்
என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி
தடாகம் வாசகர்களுக்கு வணக்கம். நான் , எழுத்தாளர் பொன்.வாசுதேவனுடன் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அப்போது வாசுதேவனின் கையிலிருந்த ரஸவாதி என்ற நூலின் தமிழாக்க நூலை வாங்கிப்பார்த்த மனுஷ்யபுத்திரன், அந்நூல் குறித்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தெரியப்படுத்தினார்.இதுபோன்ற ஒரு நூல் தமிழில் வந்திருப்பது குறித்து எங்காவது, யாராவது நான்கு வரிகள் எழுதினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று தன் எண்ணத்தை ஆதங்கத்தோடு தெரியப்படுத்தினார்.அச்சமயத்தில்தான் தடாகம் இதழில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கி தொடர்ந்து எழுத கவிஞர் நரனும், தடாகம் ஆசிரியரும் அன்போடு வற்புறுத்தியிருந்தனர். நான் இது பற்றி மனுஷ்யபுத்திரனிடம் குறிப்பிட்டு என் தயக்கங்களைப் பட்டியலிட்டபோது, அவர் என் தயக்கங்களை உதறி வாய்ப்புகளைப் பயன்படுத்தும்படி கூறினார். 'ஒரு வருட வாசிப்புப் பழக்கம் எப்படி உங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறதோ, அதுபோல் எழுதிப்பழகுவதும் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்‘ என்றார். இவ் வரிகள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் மின்னஞ்சலில், படிக்கிற புத்தகங்களை பற்றி எழுதிப்பாருங்கள் என்று கூறியிருந்தார்.ஜெயமோகன், சுந்தரராமசாமி என எல்லாப் படைப்பாளுமைகளுமே இதையேதான் சொல்லியிருக்கிறார்கள்.” எழுது, எழுதுவதே எழுத்தின் ரகசியம்” என்கிறார் சுந்தர ராமசாமி.
இலக்கிய வாசிப்பில் நான் இரண்டு வயது குழந்தைதான். நான் வாசித்ததே மிகக் குறைவுதான் என்கிற நிலையில் படைப்பாளிகளைப்பற்றி எழுதுவதென்பது போதாமை நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.இருந்தபோதிலும் நான் வாசித்தவரையில்,வாசித்த படைப்புகளை மட்டும் முன்வைத்து படைப்பாளிகளை பற்றிய அறிமுகமாக எழுதலாமென்றிருக்கிறேன்.அறிமுகப்படுத்துவது மட்டுமே என் நோக்கம் என்றாலும் என் பார்வையில் அவர்களைப் பற்றிய எண்ணங்களையும் சேர்த்து எழுதப்போகிறேன். நன்கறிந்த படைப்பாளிகளை பற்றி எழுதுகிற அதே சமயத்தில் புதிய இளம்தலைமுறை படைப்பாளிகளையும் , அவர்களின் படைப்புகளையும் பற்றி எழுதுவது என் போன்ற புதிய வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும்,ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.தடாகத்தில் நான் எழுத இருப்பதின் பின்னணியும், காரணமும் இதுதான். ஒருவகையில் எழுதிப்பார்த்து என்னை வளர்த்துக்கொள்ள முயலும் தன்னலமும், அதேசமயத்தில் படைப்பாளிகளையும்,படைப்புகளையும் பற்றி அறிமுகப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எண்ணமுமே என்பதால் என் எழுத்துக்களில் உள்ள போதாமைகளை வாசக நண்பர்களும், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளும் பெரியமனதுடன் பொறுத்தருள வேண்டுகிறேன்.
உங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தடாகம் ஆசிரியருக்கோ ,எனக்கோ தெரியப்படுத்தி ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.
ச.முத்துவேல்
நன்றி-தடாகம்.
Thadagam_Logo_Eng

Monday, September 14, 2009

பா.திருச்செந்தாழை

பா.திருச்செந்தாழை என்னும் இளைஞர் மதுரையைச் சார்ந்தவர்.கடவு நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது சந்திக்கமுடிந்தது. பார்த்தவுடன் பிடித்துப்போனது எனக்கு.அதற்குமுன்புவரை (இன்றுவரையும்)அவரின் ஓரிரு கவிதைகளையும், ஒரேயொரு கதையையும் மட்டுமே படித்திருந்தேன்.

‘உங்கள் கதைகளில்environment conciousஅதிகமாக இருக்கிறது.அதை தொடர்ந்து நன்றாகச் செய்யுங்கள்’ என்று பா.வெங்கடேசன் திருச்செந்தாழையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் திருச்செந்தாழை,’ எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து அதைத் தமிழில் சொல்லுங்கள்’ என்று சபையில் கேட்டுக்கொண்டார்.அதுதான் திருச்செந்தாழை. மளிகைக்கடையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி. நிகழ்ச்சியில் உணவுவேளையின்போது அவர் செல்பேசியில்’ கேப்பை இந்தவிலை, அந்த விலை’ என்று பேசிக்கொண்டிருந்தபோதுகூட நண்பர் யாருடனோ நையாண்டி செய்கிறார் என்றுதான் இருந்தேன்.

காலச்சுவடில் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது.ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சிறுகதைகளின் இன்றைய நிலைபற்றி எழுதும்போது குறிப்பிட்டுஇள்ள மிகச் சில படைப்பாளிகளுள் திருச்செந்தாழையும் உண்டு.

இம்மாத உயிர் எழுத்து இதழில் இடம்பெற்றுள்ள அவரின் கவிதைகளைப் படித்து நான்...

வேண்டாம். நீங்களே படித்துப்பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

கவிதைகள்

கனத்த உன் முலைத் திரட்சியால்

வெட்கித் திரும்பும் கல் ஸ்திரியே

உள்ளங்கை தீபத்துடன்

உனது புராதனக் காத்திருப்பின்

எத்தனையாவது பயணி நான்

மண்டபத் தனிமையில்

நான் சப்பித் தணிய நீ

தளர்த்தி விடுவிக்கும்

கல் முலையின் குளிர்வில்

துடித்தடங்கும் யென் குறி

*

எழுதிய ‘ ந’ வின் நுனியில்

ஒரு அலகினைச் செருகினாள்

பக்கவாட்டு நெளிவுகளில்

சில சிறகுகளை பொதிந்துவிட்டு

சுழியின் கீழே வாலிலிழுத்தாள்

கொண்டுவந்த கடுகினை

மையத்தில் ஒட்டி முடித்தபொழுது

ஒருமுறை உடல் சிலும்பி

ந பறக்கிறது

பிறகான எனது ந விலெல்லாம்

ஒரு காகம் கரைகிறது

*

பின் திரும்பியே வராத

பிள்ளையின் அம்மாவிற்கு

அவ்வப்போது காணநேரிடும்

பைத்தியக்காரர்களின்

பிளாட்பார மரணங்கள்

பின்னிரவு நெடுங்காய்ச்சலை

பரிசளிக்கின்றன.

*

புகைக்கு பழகிய பருவத்தில்

மிதித்து நசுக்கிய சிகரட்டிற்கு

சற்று தள்ளி அமர்ந்திருந்த நாடோடி

அக்கினி பகவானை மிதிக்காதீங்க

என்றதை சொல்ல விரும்புகிறேன்.

*

ஒரு உதட்டை கடித்துறிஞ்சுவதுபோல

ஒரு துரோகத்தை சிதைத்து பழிதீர்ப்பதுபோல

கடைசி கணத்தில் தற்கொலையின்

ருசியை உணர்வதுபோல

விரும்பி நிகழ்த்துகிற விபத்தைப்போல

ஒரு சிகரட்டை மிதித்தணைப்பது

*

ஒரு

கணத்தின்

எந்த விளிம்பில்

காத்திருக்கிறது

அது

-பா. திருச்செந்தாழை

Wednesday, September 9, 2009

ஹேமா

தபால் பெட்டியில் புத்தகம் இருந்தது. அப்படியென்றால்? நம் கதை வந்திருக்கவேண்டும்! எடுத்துக்கொண்டு கதவு திறந்து உள்ளே போனேன்.ஷூக்களைக் கழட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்து , புத்தகம் பிரித்தேன். என் கதையைத் தேடி, ஒருமுறை அதற்கான ஓவியங்களை ரசித்தேன். கதையின் தலைப்பு ஹேமா. ஆமாம். அதைவிட பொருத்தமான, ரசனையான, சுவாரசியமான, வசீகரமான, இன்னும் ஏராளமான …தலைப்பு எனக்குக்கிடைக்கவில்லை.மனமும் வரவில்லை.பின் கதையை ஒருமுறை மீண்டும் படித்துவிடத் தீர்மானித்து …துவங்கினேன் .
ஒரு கதையை, அதை எழுதினவன் மட்டுமே அதிகபட்ச எண்ணிக்கையில் படிப்பான் போலும்.மனதிற்குள் பலமுறை எழுதிப்பார்த்து, பேப்பரில்-இல்லையில்லை..இப்போதெல்லாம் கணினியில்- பிறகு சரிபார்த்தலுக்கென்று. மீண்டும் பிரசுரமான பிறகென்று.
"எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.."- செல் கொஞ்சியது.
மனைவி.
லேசான எரிச்சலுடன் "ம் .சொல்லு" என்றேன்.
"ம். என்னா பண்றீங்க. வேலையிலருந்து வந்தாச்சா? வீட்டுக்குள்ளேயே சிகரெட் புடிக்கிறீங்களா?.."
"இல்ல"
" ஏன் நானேதான் தினமும் ஃபோன் பண்ணணுமா? நீங்க ஒரு நாளாவது பண்ணியிருக்கீங்களா?.. நாளையிலருந்து நான் பண்ணவேமாட்டேன். எனக்குமட்டும் என்ன வந்துச்சி.."
அப்படித்தான் சொல்வாள். ஆனால், செய்யமாட்டாள்.அதாவது ஃபோன் பண்ணாமலிருக்கமாட்டாள்.
"இப்பத்தானெ வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இப்படிக் கேட்டிருந்தா , அதில ஒரு நியாயம் இருக்குது.அதுக்கும் முன்னால நீயேதான் தினமும் பண்ணிடறயில்ல"
" சரி, ஊருக்கு இந்த வாரம் வர்..."
டொய்ங். செல் அணைந்துவிட்டது.இப்போதெல்லாம் ஏனோ தகராறு இதனுடன்.ஹேங்க் ஆகிவிடும். மீண்டும் ஆன் ஆவதென்பது பெரிய போராட்டம். கால் லாக்கெல்லாம்(calls log) அழிந்துவிடும். சரி. ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. அவளிடமிருந்து தப்பித்தோம். பின்ன! ஊருக்குப்போன இரண்டுவாரத்தில், தினமும் இதே பல்லவி. வேறொன்றும் இல்லையா பேச?
சரி,கதையைப் படிப்போம்.
*******
ஹேமா
மேற்குக் கோபுரத்துக்குப் பின்னால் என் வீடு. தெற்குக் கோபுரத்துக்கு அருகே ஹேமா வீடு.அவளைத்தாண்டித்தான் நான் போயாகவேண்டும்.
ஹேமா!
சொல்லும்போதே சிகரெட்டின் முதல் பஃப் இழுப்பதுபோலிருக்கிறது. அழகி. அவளைப்பற்றி அப்படி, இப்படி என்று நான் சொல்வதெல்லாம் வீண். அவள் அவள்தான்.அவளைப்பார்க்க , எங்கோ தொலைவிலிருக்கும் கல்லூரி மாணவர்கள் அதாவது எங்கள் அண்ணன்கள் எல்லாம் தேடி வருவார்கள். அவள் பள்ளி விட்டு வெளியேறும் சமயம் அவளைப்பார்க்கக் காத்திருப்பார்கள்.கல்லூரியில் இல்லாததா! எனக்கும் அன்றைய நாட்களில் கனவுதேவதை அவள்தான்.ஆனால், மனதிற்குள் மட்டுமே இருக்கும். ஊரின் கிழக்குக்கோடியில் இருக்கும் ராபின் சில கிலோமீட்டர் தொலைவையும் பொருட்படுத்தாமல், சைக்கிளை மேட்டில் மிதித்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். என்னிடம் சைக்கிள் இல்லாததால் என்னை அழைத்துப்போக வருவதாகச் சொல்வான். ஆனால், சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. ஹேமா! ஆமாம். அதுதான் காரணம்.ட்யூஷன் போகும்போது அவளைத்தாண்டி, அவளுக்கு இணையாக, அவளுக்கு முன்னால் செல்வதில் அவனுக்கு ஆறுதல். தலைமுடியெல்லாம் முன் மண்டையில் சுரண்டியிருப்பான். ஸ்டைல். அவள் வரும் வரை நேரம் கடத்த ஏதாவதொரு டீக்கடையில் டீ வேறு. உபயம் ராபின். அவன் மட்டும் சிகரெட் பிடிப்பான். நான் அநியாயத்துக்கு நல்லவன். புகைப்பதில்லை.ஆச்சரியமாகவும் பயத்தோடும் பார்த்தேன் ராபினை.அன்று கையில் ஒரு ரோஜா வைத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் உதறல்.
மொட்டைமாடியில் கீற்றுக்கொட்டைக்குள் சிலரும் , சிலர் வெளியேயும் தரையில் அமர்ந்து மாதிரித் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. நான், ஹேமா, பாபு, ராபின் ( சொல்லணுமா என்ன?)எல்லோருமே வெளியே
உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம். ராபின், பாபு, சதா என ஒவ்வொருத்தராக எழுந்து ஹேமாவைக் கடந்துபோவதும், வருவதுமாயிருந்தனர். அதே நேரம் மற்ற பையன்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புவேறு. ஹேமா இதையெல்லாம் கவனிக்காமல் பொறுப்பாக எழுதிக்கொண்டிருந்தாள்.
சதா என்னருகில் வந்து, " டேய்! ச்சீனு. அப்படியே நைஸா எழுந்துபோய் தண்ணிக குடிக்கப்போறாமாதிரி ஹேமாவைப்பாரு.ஜட்டி தெரியுது. "
அதற்குமேல் நின்றுபேசமுடியாத காரணத்தால் போய் அமர்ந்து, எழுதத்துவங்கினான். (?!) எனக்கு மனம் கனக்கத்துவங்கிவிட்டது. நிச்சயம் நான் போய்ப் பார்க்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இப்படிப் பார்ப்பதையும், சிரிப்பதையும், அது எதையும் தெரியாமல் ஹேமா எழுதிக்கொண்டிருப்பதையும் எப்படி நிறுத்துவது.வயது வந்த ஒரு பெண்ணுக்கு இந்த உணர்வுகூடவா இல்லாமலிருப்பது! குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு..ச்சே!
கதையைமுடிக்கவிடாமல் (காலிங்) பெல் காலிங்.கதவைத்திறந்தால் நட்டு வந்திருந்தான். கம்பெனியில மோட்டார் என் பிரச்சினைன்னா, பம்ப் அவன் பிரச்சினை. அதனாலதான் நடராஜன், நட்டு. வெளியில் கிளம்பிவிட்டோம். கதையைமுடிக்கவில்லை. இருந்தால் என்ன? நாம் எழுதியதுதானே.
••••
மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் சரியாக தேனீர் இடைவேளையில் , "எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.." யாரென்று தெரியவில்லை. புதிய எண்ணாக இருந்தது.
" ஹலோ?"
" மிஸ்டர் சீனுவாசன்?"பெண்குரல்.
" ஆமாங்க. "
" நான் ஹேமா"
"......."
"என்ன ஞாபகம் வரலையா? இல்ல..பல ஹேமாக்கள்ள எந்த ஹேமாங்கிற குழப்பமா? கதை படிச்சேன்"
சொல்லிவிட்டு வேண்டுமென்றே நின்றது குரல்.
எனக்கு கணத்திற்குள் மளமளவென எல்லாம் புரிந்துவிட்டது.என் கனவுக்கன்னியாக இருந்த ஹேமா. கதை படித்திருக்கிறாள். பரவாயில்லையே. இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் கூட இருக்கா. படிச்சதோட இல்லாம சரியா புரிஞ்சுக்கிட்டு, என்னோட நம்பரை தேடிப்புடிச்சு வாங்கிப்பேசறாளே. எப்படியும் இருபது வருசமிருக்கும் பார்த்து. ஸ்கூல் முடிஞ்சப்பவே அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர். என்ன ஊருன்னுகூட எனக்குத் தெரியல.ச்சே. ஒரிஜினல் பேருங்களப் போட்டது தப்பாப்போச்சு.ஒருவேளை அவ வீட்டுக்காரரும் படிச்சிருந்தா எவ்ளோ கஷ்டப்படுவார்! இல்லயில்ல. நல்லதாப்போச்சு. இதோ ஹேமா பேசறாளே.
அதே நேரம் மனத்தின் வேகத்தை எண்ணி வியந்தது இன்னொரு மனம். ஒருகணத்திற்குள் எவ்வளவு தூரம்! வேகம்!
" என்ன சீனுவாசன். சத்தமேயில்லை. கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஆச்சரியமா இருக்குது. சந்தோசமாவும் இருக்குது. உங்க நம்பரத்தேடி, விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்."
" அதெல்லாம் இருக்கட்டும். எப்படியிருக்கீங்க? புவனா, ஹெப்ஸிபா எல்லாம் எப்படி இருக்காங்க. அவங்களோட கான்டாக்ட் இருக்கா?"
"ம்ஹூம். நீங்க அதே ஊர்ல இருந்துக்கிட்டு என்னைக் கேட்டா என்ன அர்த்தம்? "
" இல்லை. நான் இப்ப ஊர்ல இல்ல. ஆனா அவங்க எப்படியிருக்கப்போறாங்க. நல்லா குண்டாகி இரண்டு மூனு பிள்ளைங்களோட.... மாமியாகியிருப்பாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்."
" நீங்க மட்டும் என்னவாம். அங்கிள் ஆகியிருப்பீங்க."
"ச்சேச்சே! நான் இன்னும் பாக்க சின்னப்பையன மாதிரிதான் இருக்கேன்னு எல்லாருமே சொல்றாங்க. உண்மைதான் அது."
" ம். இப்படியொரு நினைப்பு வேறயா? சரி , இருக்கட்டும். கதையைப் படிச்சிட்டு அழுதிட்டேன் தெரியுமா? முடிச்சிருந்தவிதம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்ப ஒருவாட்டி மறுபடி அழுதேன்."
" எனக்கு சங்கடமாயிருக்கு இப்போ. தப்பா நினைச்சுக்காதீங்க. அட்லீஸ்ட் பேரையாவது மாத்தி எழுதியிருக்கலாம் நான். ஸாரி."
" பரவாயில்ல. நான் அழுதது அத நினைச்சு இல்ல. உங்க எல்லார் ஞாபகமும் வந்துடிச்சி."
" அப்புறம் அதுல எனக்கும் உங்கமேல ஒரு இதுன்னு எழுதியிருந்தது வெறும் ஒரு சுவாரசியத்துக்குத்தான். தப்பா நினைச்சுக்காதீங்க. அதெல்லாம் கற்பனை."
" அப்படியா! நான் அதெல்லாம் உண்மைன்னு நம்பித்தான் அழுதது, ரசிச்சது, சந்தோசப்பட்டது எல்லாம்.. நீங்க.."
டொய்ங். பாடாவதி செல்போன்.

Thursday, August 20, 2009

ராழி








வணிக இதழ்களில் இடம்பெறும் ஓவியங்களைப் பார்த்தவுடனேயே யார் வரைந்தது என்பதைச் சொல்லிவிடமுடியும். அந்தளவுக்கு அவ் வோவியங்கள் நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.ஒரே மாதிரியான முகச்சாயல்களுடைய மனிதர்கள் ஒவ்வொரு ஓவியருக்கும் பொதுவானது. ராமு என்பவர் பெயரை நான் வெகு நாட்களாக ராழி என்றே நினைத்திருந்தேன். அவர் அப்படித்தான் கையெழுத்திட்டிருப்பார். ஏதோ சுருக்கம்போல என நினைத்துக்கொண்டேன். ( என்னை மாதிரியே இன்னும் சிலரும் நினைத்திருந்தார்கள் என்று தெரியவந்தால் எனக்கு அது சற்று ஆறுதலாகக்கூட இருக்கும். இல்லையென்றால், கடைசிவரை வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்). ஒருமுறை பள்ளித்தோழனோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் ராழி என்று சொல்ல அவர்கள் வீட்டாரேச் சிரித்துவிட்டார்கள். பிறகுதான், அது ராமு என்று சொன்னார்கள்.


ம.செ.-மணியம் செல்வன் - வரையும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அனாயாசமாகக் கிறுக்கப்பட்ட கோடுகளைப்போலிருக்கும்.அவர் வரையும் மனிதர்களின் கண்களில் எப்போதும் ஒரு சோகம் இழையோடியிருக்கும். என்னதான் சிரித்தமாதிரி வரைந்தாலும் அந்த சோகமிருக்கும். அச் சோகமே நம்மை அந்தப் படங்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘உனக்கு என்ன பிரச்னைப்பா?’,’ ஏம்மா நீ இப்படியிருக்கே?’ என்று அந்த ஓவிய மனிதர்களிடம் கேட்கத்தோன்றுவதுபோல் ஒரு பரிவு ஏற்பட்டுவிடும். நாடோடித் தென்றல் படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளே (போஸ்டர்கள்) ம. செ. ஓவியத்தில்தான் இருந்தது. மேலும் டைட்டிலில் பிரபல ஓவிர்களின் ஓவியங்களையே காட்டும் சில திரைப்படங்களும் உண்டு.(ராஜபார்வை, நாடோடித்தென்றல், இந்திரன் சந்திரன் போன்றவை நினைவுக்கு வருகிறது).வட்டமுகம், சதுர முகம், ஏறின நெற்றி, சிரித்தமுகம் , குழந்தைமுகம் என்றெல்லாம் வகைப்படுத்திக்கொள்கிறோமே, அதுபோல் ஒவ்வொரு ஓவியர்களும் ஒவ்வொரு விதமான மனித முகங்களையே வரைந்திருப்பார்கள்.மாருதி வரையும் பெண்களைப் பார்த்து, பதின் பருவத்தில் கிளுகிளுப்பும், அலைக்கழிப்பும் அடைந்திருக்கிறேன்.ராமு, ஜெ.., போன்றவர்கள் வரையும் படங்கள் என்னை வசீகரிப்பதில்லை. அவர்கள் தவிர அரஸ், ஸ்யாம் என்று நிறைய பேர். இதழ்கள் சார்ந்தும், வகைமை சார்ந்தும் வெவ்வேறு ஓவியர்கள்.

என் முதல் கவிதை வெளியாகியிருந்தபோது அதற்கான ஓவியத்தைப் பார்க்கும் ஆவல் என்னிடம் மிகுதியாயிருந்தது.அலுவலகம் முடித்துவிட்டு நேராகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கிப்பார்த்தேன். மனோகர் வரைந்திருந்தார். மனம் நிறைவாயிருந்தது. பொருத்தமானதொரு சித்திரம்.அதிலொரு ஆனந்தம். அட! நாமும் ஒன்று எழுதி, அதுவும் புத்தகத்தில் அச்சாகி, அதற்கு ஒரு பிரபல ஓவியர் படம் வரைந்திருக்கிறாரே! அப்படியானால் நம்முடைய கவிதையை அவர் படித்திருப்பாரல்லவா!
குங்குமம் நடத்திய கவிதைத்திருவிழாவில் என் முதல் கவிதை வந்திருந்ததும், அவற்றை தேர்வுசெய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பதும், அவர் தேர்வானவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் ஒரு பாராட்டுவிழா நடத்தினார் என்பதும் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தக்கூட்டத்திற்கு ஓவியர் மனோகர் அவர்களும் வந்திருந்தார். நான் அவரிடம் என் கவிதையை நினைவுபடுத்தி, அந்த ஓவியம் குறித்த என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.அவர் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருப்பதால், இதழ்களுக்கு நிறைய வரைவதில்லை என்று சொன்னார்.
இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே.

Thursday, July 30, 2009

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்

மலையாளம்  சச்சிதானந்தன்

தமிழில் நிர்மால்யா
 
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு

நன்றி- எழுத்தாளர் பாவண்ணன்

Monday, July 6, 2009

பழஞ்சோறு-அமல நாயகம்-சிறுகதைகள்

கண்மணி குணசேகரன், வா.மு.கோமு,மு.ஹரிகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகளின் வரிசையில் சொல்லத்தக்க, வரத்தக்க படைப்பாளியாக அமல நாயகம் என்கின்றவரை நான் பார்க்கிறேன்.ஆனாலும், இவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று அமல நாயகத்திடம் இல்லாதிருக்கிறது.பயிற்சி மற்றும் உழைப்பில் இதை அவர் பெற்றுவிடுவது சாத்தியம்.

அமல நாயகம் அவர்களை நீங்கள் யாரும் அறிந்திருந்தால், அது ஆச்சரியமானதுதான்.ஏனெனில், இவர் இதழ்களுக்கு படைப்புகளை எழுதி அனுப்பாமால், நேரடியாக தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார்.ஏற்கனவே கவிதைத் தொகுப்புகள் சில கொண்டுவந்திருக்கிறார். தங்கர்பச்சானின் செம்புலம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருந்த “முந்திரித் தோப்பு” என்கிற கவிதைத் தொகுப்பைப் படித்தது நினைவிலிருக்கிறது. எப்போதாவது சற்று மிதமான வணிக இதழ்களில் இவரின் கவிதைகளை மட்டும் பார்த்திருக்க முடியும்.இவர் சிறுகதைகள் எதுவும் இதழ்களில் பார்த்திருப்பது கடினம்தான். அதனாலேயே இவர் பலருக்கும் தெரியாதவராக இருக்கிறார்.கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆசிரியப்பணியில் இருந்து வசித்துக்கொண்டிருப்பது கடலூர்.கண்மணி குணசேகரன் போன்ற செம்புல படைப்பாளி.

25 சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்தக் கதையுமே சோடை போனதில்லை என்பது என் கருத்து.5 கதைகள் மிக முக்கியமானது என்பதுவும்.காட்சியமைப்புகளை கலாபூர்வமாக விவரிப்பது, உணர்வு ஏற்படும் வகையில் எழுதுவது, தேவையற்ற பத்திகளை நீக்கவேண்டிய அவசியம் ஆகியவை இவரிடம் ஏற்படவேண்டிய முன்னேற்றங்கள்.தன் சொந்தக்கதைகளாக சிலதோடு நின்றுவிடாமல், ஊர் மக்களின் கதைகள் நிறையவும் எழுதியுள்ளார்.சிறுபிராயத்தில் நடந்ததைக்கூட துல்லியமாக நினைவுகூர்ந்து எழுதும் ஆற்றல் காணக்கிடைக்கிறது. நடு நாடு எனப்படும் செம்புல வட்டார கிராம வழக்குப் பேச்சில் உரை நடை அமைந்துள்ளது என்றாலும் எவ் வட்டாரத்தினருக்கும் இது பெருமளவில் சிரமம் ஏற்படுத்தாது.

மாரத்தான்,சில்லரை தேடி,வேலி, புருஷன் பொண்டாட்டி போன்ற கதைகளை படித்தபோது தாளமுடியாமல் சிரித்தது நினைவுக்கு வருகிறது.ஆனாலும் , வலியான வாழ்க்கையை கொண்ட வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை நினைத்து கடைசியில் வருத்தமே மிகும்.

சிங்க பொம்ம,காளையரு தாத்தா,மஞ்சப்பை,பலி ஆடுகள் போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்த முக்கியமான கதைகள்.வெள்ளந்தியான கிராமத்து மக்களை விசயம் அறிந்தவர்கள் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்,அதைக்கூட அறிந்துகொள்ள முடியாமல், தன்னுடைய வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள், நிர்ப்பந்தமாகிவிடுகிறது போன்ற விசயங்களை முன்வைக்கும் கதைகள் .

இக் கதைகளைப் படித்துமுடித்திருந்த நாளிலேயே எழுதியிருந்தால ஓரளவாவது இவற்றின் தரத்திற்கு நெருக்கமாக நான் எழுதியிருக்கக்கூடும். ஆனால், படித்து சில வாரங்களாகிவிட்ட நிலையிலும், மனம் வேறு சூழல்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய காரணத்தாலும் ஆசிரியரின் உரையிலிருந்தே சில வரிகளை முன் வைப்பது பொருத்தமாய் இருக்கும்.

”என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்.உண்மையானவர்கள்.உணர்ச்சியானவர்கள்.எதை நம்பினார்களோ அதையே வாழ்பவர்கள், அதையே சொல்பவர்கள். அவர்களிடம் பொய் முகங்கள் இல்லை. இந்தப் பழஞ்சோறு எம் மக்களைப் பற்றிய மறு பதிவு.உயர்வையும், தாழ்வையும், வெற்றியையும், தோல்வியையும், முற்போக்கையும், பிற்போக்கையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம்.கருவிகளை நம்புகிற அளவுக்கு நாம் உறவுகளை நம்புவதில்லை,உறவு என்பது வெறும் சமன்பாடல்ல,கூட்டிக் கழித்துக் கொள்வதற்கு. உறவுகளை அறிந்து கொள்வதும் புரிந்துகொள்வதும் நம் சமூக மதிப்பீடுகளை உயர்த்தும். புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும்...

நம் மதிப்பீடுகளையும் பண்பாடையும், கலாச்சாரத்தையும் குற்றமான ஒன்றாக நாம் நினைக்கிறவர்களாய் இருந்தால், நாளை நம்முடையது என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் எதுவுமே இருக்காது...”

வம்சி புக்ஸ் நிறுவனத்தாரின் துணை நிறுவனத்தின் மூலம் நல்ல வடிவமைப்புடன் அச்சாகி வந்திருக்கிறது.

நூல் விபரம்
பழஞ்சோறு-சிறுகதைகள்
ஆசிரியர்-அமல நாயகம்(99527 45500)
முதற்பதிப்பு டிசம்பர் 2008
பக்கங்கள் 180
விலை ரூ.90.00

வெளியீடு
அமரபாரதி
பதிப்பாளர்&விற்பனையாளார்
84,மத்தலாங்குளத்தெரு,
திருவண்ணாமலை.
9443222997

Wednesday, June 17, 2009

பொம்மைக்காரி-சிறுகதை-பாவண்ணன்

இம்மாத (ஜூன்'09) உயிர் எழுத்து இதழில் வெளியாகியுள்ள பொம்மைக்காரி என்கிற சிறுகதையை பாவண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்.அண்மையில் நான் படித்த சிறுகதையில் மிகவும் பிடித்த கதையிது என்பது என் கருத்து.யதார்த்தவாதமான, இயல்பான இக்கதையைப் படித்துவிட்டீர்களா? படிக்காதவர்களை படிக்கத்தூண்டுவதும், படித்தவர்கள் விரும்பினால் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளவுமே இப் பதிவு.

Saturday, June 13, 2009

ஸ்ரீ நாராயணகுரு

இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் சமய நெறியிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள்.இந்தியாவில் இருந்த சாதி வேறுபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.சாதிகளின் ஏற்றத் தாழ்வுகள் மதங்களிலும் ஊடுருவியது.பல்வேறு காரணங்களால் விசுவரூபமெடுத்த சாதிப் போராட்டங்களிலிருந்து மக்களைக் காத்த மகான்களின் வரிசையில் முதன்மையானவர்,கேரளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாராயணகுரு.சமய, சமுதாய உரிமைகளுக்காக அயராது அமைதி வழியில் உழைத்த நாராயணகுரு19 ஆம் நூற்றாண்டில் தோன்றி 20 ஆம் நூற்றாண்டில் மகா சமாதியடைந்த மகான்.எளிய குடும்பத்தில் பிறந்து, மாடு மேய்த்து , விவசாயம் செய்து, ஆசிரியராகப் பணியாற்றி,ஆயுர்வேதம் கற்று மருத்துவத்தொண்டாற்றி, தன் முயற்சியால் உயர்ந்து ஞான குருவானவர்.



ஓணம் திருவிழாவின் 3 ஆம் நாளான சதய நட்சத்திரத்திம் கூடிய நன்னாளில், 1854 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் அதாவது,கொல்லம் 1030 ஆம் ஆண்டு சிம்ம(ஆவணி) மாதம் 13 ஆம் நாள் நாராயணகுரு திரு அவதாரம் செய்தார். நாராயணகுருவின் தந்தை மாடன் ஆசானும் சிறந்த கல்வியாளர்.மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், சோதிடம்,ஆயுர்வேதம் என்று மாடன் ஆசான் பல துறைகளில் திறமைபெற்றவர்.குட்டியம்மை-மாடன் ஆசான் தம்பதியர் நான்கு குழந்தைகள் பெற்றனர். அவர்களில் மூவர் பெண்கள். ஒருவர் ஒப்பற்ற குரு நாதர் நாராயணகுரு.திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பழந்தி என்கிற கிராமத்தில் வயல்வார வீட்டில் பிறந்தார். பிறந்தபோது குழந்தை நாராயணகுரு அழவேயில்லையாம்.

அக்கால கேரளத்தில் தீண்டாமை உச்சத்தில் இருந்தது.கீழ்ச்சாதியினர் உயர்சாதியினரிடம் 32 அடி தொலைவில் இருந்தே பேசவேண்டும் என்ற கொடிய வழக்கம் அங்கு நடைமுறையில் இருந்தது.நாராயணகுருவின் பெற்றோர் இது குறித்து அவரிடம் கூறி எச்சரிக்கை செய்திருந்தனர். நாணு இளமையிலேயே தீண்டாமைக் கொள்கையை வெறுத்தார்.நாராயணகுரு ஈழவர் சாதியில் பிறந்தவர் என்று அறிய முடிகிறது. இது அங்கே பிற்படுத்தப்பட்ட சாதி என்பதாகவே கணிக்க முடிகிறது. ஈழவரினும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட சாதியினர் ஒருவர் வீட்டில் உள் நுழைந்து வந்த சிறுவன் நாராயணகுருவை பற்றி அவர் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியானம் ,யோகம், பிரணாயாமம்,மருத்துவம்,என கற்றுத் தேர்ந்த நாராயணகுரு தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் புலமை பெற்றவராவார்.தமது 24 ஆவது வயதில் மும்மொழிகளிலும் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றுள்ளார்.தமிழில் தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றைக் கற்று அறிந்திருந்தார்.நாராயணகுருவின் இளமைப்பருவத்தில் உறவுப் பெண்ணொருத்தியை மணமுடிக்க அவரின் பெற்றோர் நினைத்தபோது மறுத்துவிட்டார்.அய்யாவுசாமி என்ற தமிழர், திருவனந்தபுரத்தில் அரசுப் பணியில் இருந்தவர்.அய்யாவுசாமி ஆன்மீக அறிவும் முற்போக்குச் சிந்தனைகளும் உடையவாராகத் திகழ்ந்தார்.யோகக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாராயணகுருவுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.மேலும் பல உபதேசங்களையும் கற்றுத் தந்தார்.அய்யாவுசாமியின் உபதேசத்தை நாராயணகுரு தமது வாழ்நாள் முழுதும் பின்பற்றி நடந்தார்.

நாராயணகுரு1888 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் அருவிப்புரத்தில் சமத்துவத் திருக்கோயிலை நிறுவினார்.”இங்கே அமைந்திருக்கும் கோயில் ஒரு முன் மாதிரியாக விளங்கவேண்டும், மனிதர்கள் யாவரும் உடன்பிறந்தவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். சாதி பற்றிய தவறான கருத்துகள் அழிக்கப்படவேண்டும். இக் கருத்துக்களை விளக்குவதற்காகத்தான் இந்த் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார் நாராயணகுரு.'ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்” என்பதே நாராயணகுருவின் முக்கிய உபதேசம்.

நாராயணகுரு சாதி, மத வேறுபாடுகளைக் களைய ஆல்வாய் அத்வைத ஆசிரமத்தில் சர்வ மத மாநாட்டை நடத்தினார். ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வ சமய மாநாடு இதுவேயாகும்.உயர்கல்வி, சமஸ்கிருத அறிவு, தூய்மை, பண்பு, ஒற்றுமை ஆகிய ஐந்தின் மூலமே முன்னேறி, சமுதாயத்தில் முதல் நிலையைப் பெற முடியும் என்று கருதினார் நாராயணகுரு.கைத்தொழிலை வலியுறுத்தினார்.சுவாமிகளின் அமைதியான அணுகுமுறையினால் கேரளத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கல்வி, வழிபாட்டு உரிமை, வேலை வாய்ப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் கேரளம் முன்னேறியது.கேரள மக்கள் தங்களுக்குள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று வருகின்றனர். இவை அனைத்துக்கும் குருதேவர் கொண்ட்டிருந்த தீர்க்க தரிசனமும் அமைதி வழியுமே காரணம்.

நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் முதல் செயலாளராகத் தொண்டாற்றியவர் மகாகவி குமரன் ஆசான். இவர், கேரள மாநிலத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர். தமது கவிதைகளின் வழியே சமத்துவக் கொள்கைகளை எடுத்துரைத்தவர்.நாராயணகுருவை மகாத்மா காந்தி அவர்கள் சந்தித்துள்ளார். 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் இச் சந்திப்பு நடந்துள்ளது.”அழகு நிறைந்த திருவாங்கூர் ராஜ்ஜியத்துக்கு வந்தபோது, புண்ணிய ஆத்மாவான நாராயணகுருவைத் தரிசிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பினை என் வாழ்வின் பெரும்பேறாகவேக் கருதுகிறேன்” என்று காந்திக் குறிப்பிட்டுள்ளார்.தேசியக் கவிஞர் ரவீந்திரனாத் தாகூர் சந்திதுவிட்டு, “ நான் உலகின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். ஆங்காங்கு பல சித்தர்களளையும் மகரிஷிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், மலையாள நாட்டில் இருந்த நாராயணாகுருவைச் சிறந்த அல்லது இணையான மகா ஞானியை நான் எங்கும் பார்த்ததில்லை. அந்த மகானின் யோகக் கண்களும் ஒளிர்விடும் முக தேஜஸும், என்னால் ஒருபோதும் மறக்க இயலாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.பெரியார், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,டாக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர்களும் நாராயணகுருவைச் சந்தித்துள்ளனர். மலையாள மனோரமா 1988 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவில் பிரபலங்களில் முதன்மையானவராக பல நூறு பேர்களிடையே நாராயணகுருவை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

நாராயணகுரு தமிழகத்தில் பல இடங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார்.இவரின் தர்ம பரிபாலன யோகம் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் இயங்கி வருகிறது.”என்னை முதலில் புரிந்துகொண்டது தமிழ் நாடே” என்று பலமுறை நாராயணகுரு குறிப்பிட்டுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு சாலைக்கு ”திரு. நாராயணகுரு சாலை” என்றுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருக்குறளில் மூன்று அதிகாரங்களை (கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு & நீத்தார் பெருமை)மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் நாராயணகுரு. திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை நாராயணகுரு சந்தித்துள்ளார்.இச் சந்திப்புப் பற்றி இன் நூலில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவையானவையாகும்.

1928 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் நாராயணகுரு சமாதியடைந்தார்.கேரளத்தின் கயிறு, ஓடு முதலான தொழில்கள் உருவாகக் காரணமாயிருந்தவரும் சாதி, சமய வேறுபாடுகளைக் களைய தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான நாராயணகுருவை கேரள மக்கள் தெய்வமாக எண்ணுவதில் வியப்பேதுமில்லை.


- நிறைய படங்களுடன் கூடிய ஸ்ரீ நாராயணகுரு என்கிற நூலிலிருந்து.

பின் குறிப்பு_ நாராயண குரு பற்றிய திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படுவதாகவும் அதி நாராயணகுருவாக நடிப்பவர் தலைவாசல் விஜய் என்பதும் அண்மையச் செய்திகள். நாராயணகுருவின் பிம்பமாகத் தோன்றும் தலைவாசல் விஜய்க்கு கேரளத்தில் இப்போது ஏக மரியாதையாம்.

நன்றி-கிழக்கு பதிப்பகம்.

நூல் விபரம்

ஸ்ரீ நாராயணகுரு
ஆசிரியர்-பருத்தியூர் கே. சந்தானராமன்
112 பக்கங்கள்
விலை ரூ.60.

இந்நூலை இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்